இறக்குமதி , ஏற்றுமதி ஆவணப் பணிகள் டிஜிட்டல் முறையில்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

 

இலங்கையின் இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் மீள் ஏற்றுமதி செயற்பாடுகளுக்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் அனுமதிகளை டிஜிட்டல் முறையில் முகாமை செய்வதற்காகப் புதிய ஒழுங்குமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் 2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலத்திரனியல் பரிவர்த்தனைச் சட்டத்தின் கீழ் இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த நவம்பர் 5 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ள இந்த ஒழுங்குமுறைகளின் மூலம் ‘தேசிய வர்த்தக ஒற்றை  சாளர முறைமை’ சட்டப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

‘One TRADE’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் முறைமையின் மூலம் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கான விண்ணப்பங்கள், பிரகடனங்கள், ஆவணங்கள் மற்றும் பிற தகவல்களை இலத்திரனியல் முறையில் சமர்ப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் தொடர்புடைய அரச நிறுவனங்கள் நடைமுறையிலுள்ள சட்டங்களுக்கு உட்பட்டு அந்த ஆவணங்களைப் பரிசீலிக்கவும், அங்கீகரிக்கவும் அல்லது நிராகரிக்கவும் டிஜிட்டல் முறையிலேயே செயற்பட முடியும்.

GovTech Sri Lanka (Pvt) Ltd’ நிறுவனம் இந்த முறைமையின் அதிகாரப்பூர்வ செயற்பாட்டாளராகப் பெயரிடப்பட்டுள்ளதுடன், இலங்கை சுங்கம், இலங்கை துறைமுக அதிகாரசபை, தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் இலங்கை தேயிலைச் சபை உள்ளிட்ட ஆறு அரச நிறுவனங்கள் இதில் பங்காளர் தரப்புகளாக இணைக்கப்பட்டுள்ளன.

வர்த்தமானி அறிவித்தலின்படி தேயிலை, தென்னை மற்றும் தென்னை சார்ந்த பொருட்கள் உட்பட 124 ‘HS’ குறியீட்டு எண்கள் இந்த புதிய ஒழுங்குமுறைகளில் சேர்க்கப்பட்டுள்ளன.

 மேலும், ‘One TRADE’ முறைமையின் மூலம் சமர்ப்பிக்கப்படும் இலத்திரனியல் ஆவணங்கள், அவை டிஜிட்டல் வடிவில் இருக்கின்றன என்ற ஒரே காரணத்திற்காக அவற்றின் சட்டப்பூர்வ செல்லுபடியை நிராகரிக்க முடியாது என்றும் அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this Article
Leave a comment