அற்புத பலன் தரும் ஆடி அமாவாசை

SUB EDITOR
SUB EDITOR
3 Min Read

ஆடி அமாவாசை, பித்ரு தர்ப்பணம் கொடுக்க மிகச் சிறந்த நாள். சூரியனும், சந்திரனும் இணையும் நாளே ‘அமாவாசை’ ஆகும். கடக ராசியானது, சந்திரனின் சொந்த வீடாகும். சூரியன் கடகத்தில் சஞ்சரிக்கும் மாதம் ஆடி. எனவே தாய் ஸ்தானத்திற்குரிய சந்திரனும், தந்தை ஸ்தானத்திற்குரிய சூரியனும் இணையும் நாளில், சந்திரன் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த அமாவாசை தினத்தில் நாம் செய்யும் தர்ப்பணத்தால், முன்னோர்களின் ஆசியையும் நாம் பெறலாம். ‘நல்ல காரியங்கள் எல்லாவற்றையும் எள்ளும், தண்ணீரும் கொடுத்த பிறகே செய்யலாம்’ என்பது ஆன்றோர் வாக்கு. இது அமாவாசையில் தர்ப்பணம் செய்துவிட்டு தொடங்கும் காரியங்கள் வெற்றியாகவே முடியும் என்பதைக் குறிப்பதாகும்.

இந்த தர்ப்பண காரியங்களை நாம் சிரத்தையாகச் செய்தால், நமக்கு அனைத்து வளங்களும் கிடைக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். யாருக்கெல்லாம் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பது பற்றி பலருக்கும் சந்தேகம் ஏற்படுவது இயல்பு. தன் தகப்பனார், தன் தாத்தா, கொள்ளுத் தாத்தா, தன் அம்மா, தன் பாட்டி, தன் கொள்ளுப் பாட்டி, அம்மாவின் கோத்திரம்- அவர்களின் பரம்பரை, அப்பாவின் கோத்திரம் – அவர்களின் பரம்பரை என்று பன்னிரண்டு பேர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். மேலும், யாருமில்லாமல் ஆதரவற்ற நிலையில் இறந்தவர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதும் மிகவும் விசேஷமானது என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.

ஆடி அமாவாசை அன்று பித்ருக்களுக்கு எள்ளும், தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்ய வேண்டும். எள்ளும் தண்ணீரும் பித்ருக்களுக்கு மிகவும் பிடித்தமானது. அமாவாசை நாளில் நம் முன்னோர்களை நினைத்து, எள்ளும் தண்ணீரும் கொடுத்து பித்ரு ப்ரீதி செய்து அவர்களின் ஆசிகளைப் பெற வேண்டும்.

‘எள்’ வடமொழியில் ‘திலம்’ என்று பொருள்படும். ‘திலம்’ என்றால் ‘விஷ்ணோர் அம்ச சமுத்பவ’ என்று பொருள். விஷ்ணுவில் இருந்து விஷ்ணு பகவானின் அம்சமாக தோன்றியது எள் ஆகும். எள்ளை தானமாகக் கொடுத்தாலே சகல பாவங் களும் நீங்கிவிடுமாம்.

நமது முன்னோர்களை வேண்டி வணங்கும் விரதம், அமாவாசை விரதமாகும். அன்றைய தினம் காலையில் எழுந்து, அருகில் இருக்கும் ஆற்றிலோ, குளத்திலோ குளித்து விட்டு, இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்.

முறைப்படி தர்ப்பணம் செய்து வைக்கும் அந்தணர்கள், ஆற்றின் கரையோரங்களில், குளக்கரைகளில், கடற்கரையோரங்களில் இருப்பார்கள். அவர்கள் மூலம் தர்ப்பணம் செய்யலாம். அதன்பின்னர், முதியவர்கள் மற்றும் ஏழைகளுக்கு பெரிய அளவில் இல்லாவிட்டாலும், சிலருக்காவது அன்னதானம் வழங்க வேண்டும்.

அமாவாசையன்று, வீட்டில் பெண்கள் குளித்து காலை உணவு உண்ணாமல், இறந்த முன்னோர்களுக்குப் பிடித்தமான உணவுகளையும், பதார்த்தங்களையும் தயார் செய்வார்கள். அன்றைய சமையலில் எல்லாவிதமான காய்கறிகளும் இடம் பெற வேண்டும்.

விரதம் இருப்பவர்கள், காலையில் எதுவும் சாப்பிடாமல் இருந்து, பின் எத்தனை நபர்களை வணங்க வேண்டுமோ, அத்தனை இலைகள் போட்டு, சமைத்த எல்லா உணவுகளையும், பதார்த்தங்களையும் படைத்து, முன்னோர்களுக்கும் படைப்பவர்களுக்கும் துணிகளை வைத்து, அகல் விளக்கேற்றி, தூப தீபம் காட்டி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும்.

பிறகு, படைத்த எல்லா உணவு, பதார்த்தங்களையும் தனித் தனியாக இலையோடு எடுத்து, வீட்டிற்கு வெளி யில், உயரமான இடத்தில் வைக்க வேண்டும்.

முன்னோர்களுக்குப் படைத்து வைப்பவைகளை, காக்கைகள் மட்டுமே உண்ண வேண்டும் என்பதால்தான் உயரமான இடங்களில் வைக்க வேண்டும். காக்கைகள் உண்ட பிறகு, வீட்டிற்குள் முறைப்படி பரிமாறப்பட்ட இலைகளில் உறவு முறைகளுக்கேற்ப உள்ளவர்கள் அமர்ந்து சாப்பிட வேண்டும்.

அமாவாசை விரதம் இருப்பவர்கள் காலையில் சாப்பிடக் கூடாது, பகலில் சாப்பிடலாம். இரவில் பால், பழம் அல்லது சிற்றுண்டிகள் ஏதாவது சாப்பிடலாம். முறைப்படி அமாவாசை விரதமிருந்து முன்னோர் களை வழிபடுபவர்களுக்கு அவர்களின் ஆசியும், அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Share this Article