பிரதேச செயலாளர்கள், கலாசார உத்தியோகத்தர்கள், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் ஆகியோருடனான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் கடந்த 20 ஆம் திகதி மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
இதில் மாணவர்களுக்கு அறநெறி வகுப்புக்களை கிரமமாக நடாத்துதல் தொடர்பாக ஆராயப்பட்டது. இதற்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள் அனைவரும் பொறுப்பாக செயற்படுதல் வேண்டுமென குறிப்பிடப்பட்டது.
பிரதேச செயலக மட்டத்தில் இது தொடர்பான கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தி நடைபெற்றதாகவும்,
ஆலய நிர்வாகங்களுக்கு அறநெறி வகுப்புக்களை மேற்கொள்ளுதல் தொடர்பாக அறிவுறுத்தியதாகவும், சில ஆலயங்களில் அறநெறி வகுப்புக்கள் நடைபெற்று வருவதாகவும் அவ்வாறு நடைபெறாத ஆலயங்களில் இதனை முன்னெடுப்பதாகவும் பிரதேச செயலாளர்களால் குறிப்பிடப்பட்டது.
அறநெறி வகுப்புக்களில் ஈடுபடும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவானதாகவும், அறநெறி வகுப்புக்களில் ஈடுபடுபவர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்குதல் மற்றும் மாணவர்களுக்கு உணவுகளை வழங்குதலில் சில இடர்பாடுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டன.
அரசாங்க அதிபர் கருத்துத் தெரிவிக்கும் போது பிரதேச செயலக மட்டத்தில் ஆலய நிர்வாகங்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளுதல், சமயப் பண்புள்ள பொருத்தமான ஆசிரியர்களை தெரிவு செய்தல் மற்றும் அவர்களுக்கான வேதனத்தை வழங்குதல், மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தல், மாணவர்களின் பாதுகாப்புக்களை உறுதிப்படுத்துதல் வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் கலை மன்றங்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புகளின் ஊடாக மாணவர்களை கலைசார் செயற்பாடுகளில் ஈடுபடுத்தல் தொடர்பாகவும் குறிப்பிட்டார்.
அத்தோடு பிரதேச மட்டத்தில் குழு வகுப்புக்கள், இணைய வகுப்புக்கள், தனியார் வகுப்புக்கள் நடைபெறும் இடங்களின் தரவுகள் மற்றும் பிரதேச மட்டத்தில் அறநெறி வகுப்புக்களை மேற்கொள்ளும் ஆலயங்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புகளின் தரவுகளையும் விரைவாக சேகரித்துத் தருமாறு குறிப்பிட்டார்.
பிரதேச மட்டத்தில் கலாசார நிகழ்வினை செய்தல், ஆலயங்களில் அறநெறி நிகழ்வுகளை மேற்கொள்ளுதல் மற்றும் போட்டிகளை வைத்தல் தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டது.
மாதாந்த பௌர்ணமி விழா கொண்டாடுதல் தொடர்பாகவும் ஒவ்வொரு பிரதேச செயலகங்களும் ஒவ்வொரு நிகழ்வுகளை முன்னெடுத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன. முதலாவது பௌர்ணமி தின நிகழ்வு 01.08.2023 அன்று நடைபெறவுள்ளது.
கலாசார உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர் தொடர்பான உத்தியோகத்தர்கள் உங்கள் பணிகளை திறம்பட செய்தல் வேண்டும். சமூக ரீதியான வளர்ச்சிக்கு உங்களின் பணி மிக முக்கியமானது, கிராம மற்றும் பிரதேச மட்டத்தில் அறநெறி வகுப்புக்கள் மற்றும் கலைசார் நடவடிக்கைகளில் மாணவர்களை ஈடுபடுத்துதல் மூலம் எதிர்காலத்தில் சிறந்த பிரஜைகளை உருவாக்கமுடியும் எனவும் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இதில், மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர், மாவட்ட மற்றும் பிரதேச செயலக இந்துசமய கலாசார உத்தியோகத்தர்கள், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.