வடக்கு மாகாணத்தைச் சுற்றுலாத்துறையில் ஒரு முதன்மை மையமாக மாற்றுவதற்கு அரச திணைக்களங்களின் அதிகாரத்துவத் தத்தளிப்புகள் மற்றும் “சிவப்பு நாடா” நடைமுறைகள் தடையாக இருப்பதாக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நேற்றைய தினம் (24/04) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற சுற்றுலா அபிவிருத்தி குறித்த உயர்மட்டக் கலந்துரையாடலின் போதே அவர் இந்தத் திடுக்கிடும் கருத்துக்களை வெளியிட்டார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு வடக்கின் சுற்றுலா மேம்பாட்டில் மிகுந்த நேர்மையுடனும் ஆர்வத்துடனும் செயற்பட்டு வருவதாக ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
நல்ல திட்டங்களை நடைமுறைப்படுத்த முற்படும்போது, சில அரச திணைக்களங்கள் முட்டுக்கட்டையாக இருப்பது மிகுந்த கவலைக்குரியது எனவும், அதிகாரிகள் வினைத்திறனுடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மாகாணச் சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் ஜே.விவேகானந்தன் பேசுகையில், சிறிய விடுதிகளைப் பதிவு செய்யும் அதிகாரத்தையாவது மாகாணப் பணியகத்திற்கு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன் மற்றும் எஸ்.சிறீபவானந்தராஜா ஆகியோர் முதலீட்டாளர்களின் ஏமாற்றங்களை அடுக்கிக் காட்டினர்.
சுற்றுலாப் பயணிகள் வெறும் கடலில் குளிப்பதை விட, சாகச விளையாட்டுகள் மற்றும் கடலின் நடுவில் அமைக்கப்படும் குடில்களையே விரும்புகின்றனர்.
மாலைதீவு போன்ற நாடுகளுக்கு நிகரான இயற்கை வளம் வடக்கின் தீவுகளில் உள்ளது. ஆனால், அனுமதி பெறுவதில் ஏற்படும் நீண்டகாலத் தாமதத்தால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
தேவையற்ற சிவப்பு நாடா முறைகளை அகற்றி, முதலீடுகளுக்குப் பச்சைக்கொடி காட்டப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.