அத்தியாவசிய சேவைக்குள் உள்ளடங்கும் துறைகள் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள துறைகளைச் சேர்ந்தோர் இன்று வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால் அத்தியாவசிய பொது சேவை சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கையை மீளப்பெறுமாறு வலியுறுத்தியும், பல கோரிக்கைகளை முன்வைத்தும் 40க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று (மார்ச் 14) புதன்கிழமை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இது தொடர்பில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த வாரமும் நாடு முற்றாக முடங்கும் என தொழிற்சங்கங்கள் அறிவித்த போதிலும் அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை.
அரசாங்கம் பெரும்பாடுபட்டு தடையின்றி மின் விநியோகத்தை வழங்கியுள்ளது. எரிபொருள், எரிவாயு என்பன தட்டுப்பாடின்றி வழங்கப்படுகின்றன.
இதற்காக எடுக்கப்பட்ட கடுமையான தீர்மானங்களால் எதிர்வரும் 20ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை கூடி இலங்கைக்கு நீடித்த கடன் வசதியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதைத் தடுப்பதற்கு முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு இடமளித்து விடக் கூடாது என்பதற்காக அரசாங்கத்தால் மக்கள் தமது அன்றாட வாழ்க்கையை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கு அத்தியாவசியமான போக்குவரத்து, துறைமுகம், தபால், மின்சாரம் உள்ளிட்ட அனைத்தும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டின் பொது சட்டத்தை மீறினால் அது தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் எவை என்பது தொடர்பில் , சட்டம் மீறப்பட்டதன் பின்னர் தீர்மானிக்கப்படும். சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்தார்.