யாழ்ப்பாணம், அத்தியடியில் பெண் ஒருவர் அடிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இரவு (பெப்ரவரி 12) நடந்துள்ளது.
கணவரைப் பிரிந்து மகளுடன் வீட்டில் தனியாக வசித்து வந்த 55 வயதுப் பெண் ஒருவரே மரக் கட்டை ஒன்றால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
அந்த வீட்டுக்கு வேலைக்கு வரும் நபரே பெண்ணைத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சந்தேகநபர் அந்த வீட்டில் நீண்டகாலமாக வேலை செய்பவர் என்று கூறப்படுகின்றது. ஆடுகளுக்கு குழை வெட்டுவதற்கும், வீட்டு வேலைகள் செய்வதற்கும் வரும் இவர் நேற்றும் வழமைபோன்று வேலைக்கு வந்துள்ளார்.
வீட்டுக்குள் மகள் இருந்த நிலையில், உயிரிழந்த பெண்ணுக்கும் வேலைக்கு வந்தவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது. அந்த சத்தம் கேட்டு மகள் வீட்டுக்குள் இருந்து வந்து பார்த்தபோது தாய் இரத்தம் வழிந்தோட வீழ்ந்து கிடந்தார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவ இடத்துக்குச் சென்று தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மரக்கட்டை ஒன்றால் தாக்கப்பட்டே பெண் உயிரிழந்துள்ளார் என்று ஆரம்ப விசாரணைகளின் மூலம் அறியமுடிகின்றது. சந்தேகநபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.