வடக்கு மாகாணத்தில் க.பொ.த. உயர்தர பரீட்சையில் சித்தியடையாதவர்கள் மருத்துவர்களாக பணியாற்றி வருவதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதை அவர் கூறியுள்ளார். இதை மேலும் விளக்கியபோது,
“வவுனியா மற்றும் மன்னார் வைத்தியசாலைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் வெளிநாடுகளில் பட்டம் பெற்றவர்கள். அவர்கள் இலங்கையில் உயர்தர பரீட்சையில் சித்தியடையவில்லை.
வட மாகாண சுகாதார திணைக்களத்திடம் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பகிரப்பட்டுள்ளன.
மருத்துவர் ஒருவர் இலங்கை மருத்துவ சங்கத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும், அவர் படித்த கல்லூரி சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும் என்பதே முக்கியம்.
உயர்தரம் இருந்ததா இல்லையா என்பது இங்கே முக்கியமல்ல. இவர்களின் கல்வி தரம் முக்கியம். உயர்தரம் என்பது எமது நாட்டில் ஒரு முக்கிய திருப்புமுனையாகக் காணப்படுகிறது.
உயர்தரத்தில் 3A சித்தி பெற்ற கொழும்பு மாவட்ட மாணவர்கள் பலர் மருத்துவம் படிக்க முடியாமல் உள்ளனர்.
அவர்களுக்கு நாம் என்ன சொல்லப்போகிறோம்?” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.