யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவுற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மற்றும் பதில் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 492,280 வாக்காளர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 100,907 வாக்காளர்களும் சேர்த்து, யாழ். தேர்தல் மாவட்டத்தில் மொத்தம் 593,187 பேர் வாக்களிக்க தகுதியுடையவர்களாக உள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 511 வாக்குப்பதிவு நிலையங்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 108 வாக்குப்பதிவு நிலையங்களும் என மொத்தம் 619 வாக்குப்பதிவு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நேற்று (செப் 19) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது, மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் பதில் மாவட்ட செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் இதனை கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது:
வாக்களிப்பு நிலையங்களில் செப்டம்பர் 21ஆம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும். பிற்பகல் 4 மணிக்கு வரை, வரிசையில் காத்திருக்கும் வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டுகள் வழங்கப்படும், ஆனால் 4 மணிக்கு பிறகு நிலையத்திற்குள் நுழைவது அனுமதிக்கப்படாது.
தெல்லிப்பழையைச் சேர்ந்தவர்கள், பருத்தித்துறையில் தற்காலிகமாக வசிக்கின்றவர்களுக்கு, வியாபாரிமூலையிலிருந்து தெல்லிப்பழைக்கு வாக்களிப்பதற்கான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் கடமைகளுக்காக 8,232 அதிகாரிகள் மற்றும் 2,100 பொலிஸார் இணைந்து பணியாற்றவுள்ளனர். இலங்கை போக்குவரத்துச் சபை 42 பேருந்துகள், மற்றும் தனியார் போக்குவரத்துச் சங்கம் 132 பேருந்துகளை தேர்தல் கடமைகளுக்கு ஒழுங்கு செய்துள்ளது.
நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவிற்கு போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெடுந்தீவில் வாக்களிப்பு முடிந்தவுடன், வாக்குப் பெட்டிகள் உலங்குவானூர்தி மூலம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு கொண்டு வரப்படும்.
முக்கிய தலைமை அலுவலர்களுக்கு வாக்குப் பெட்டி, வாக்குச் சீட்டு மற்றும் பிற ஆவணங்கள் இன்று (செப் 20) காலை 7 மணிக்கு யாழ். மத்திய கல்லூரியில் வழங்கப்படும். முதலாவது பேருந்து காலை 8:30 மணியளவில் புறப்படும்.
வாக்குகளை எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் பெறுபேறுகளை வெளியிடும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. யாழ். மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 511 வாக்குப்பதிவு நிலையங்களின் வாக்குகளை எண்ண 41 வாக்கு எண்ணும் நிலையங்களும், அஞ்சல் வாக்குகளை எண்ண 14 நிலையங்களும், மொத்தம் 55 வாக்கு எண்ணும் நிலையங்கள் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளன.