புதிய வடிவமைப்பில் நவீன மயப்படுத்தப்பட்ட பாராளுமன்ற இணையதளம் அங்குரார்ப்பணம்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலங்கைப் பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் www.parliament.lk கடந்த 19 ஆண்டுகளாக செயல்பட்டு வருவதுடன், அதன் புதிய நவீன மயப்படுத்தப்பட்ட பதிப்பு கடந்த நவம்பர் 27ஆம் திகதி சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அவர்களின் தலைமையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலி, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரஉள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

2006ஆம் ஆண்டு அறிமுகமான பாராளுமன்ற இணையதளம் இதுவரை இரு தடவைகள் புதுப்பிக்கப்பட்ட நிலையில், இம்முறை மூன்றாவது தடவையாக மேம்படுத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அவர்களின் வழிகாட்டலின் கீழ், செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் செயலாளர் குழுவின் மேற்பார்வையில், தேசிய ஜனநாயக நிறுவகத்தின் (NDI) முழுமையான ஆதரவுடன், பாராளுமன்ற தகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களம் மற்றும் Techies (Pvt) Ltd நிறுவனத்தின் ஒத்துழைப்புடனும் இந்த புதிய இணையத்தளம் வடிவமைக்கப்பட்டது.

புதுப்பிக்கப்பட்ட இந்த இணையதளம் மேம்படுத்தப்பட்ட அணுகல் வசதிகளையும் பல நவீன அம்சங்களையும் கொண்டுள்ளது. இதில் உள்ள “My Parliament” portal மூலம் ஒவ்வொரு குடிமக்களும் பாராளுமன்றத்துடனும், மக்களவை உறுப்பினர்களுடனும் நேரடியாக தொடர்பு கொள்ள முடியும். இணையதளத்தில் பதிவு செய்வதன் மூலம் பொதுமக்கள் பாராளுமன்ற சேவைகளை விரைவாகவும் எளிமையாகவும் பயன்படுத்தலாம். மேலும், பாராளுமன்றத்துடன் இணைந்து பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கும் தங்களது பணிகளை எளிதாகச் செய்வதற்கு இது உதவுகிறது.

பல ஆண்டுகளாக தேசிய மட்டப் போட்டிகளில் ‘சிறந்த அரசாங்க இணையத்தளம்’ மற்றும் ‘சிறந்த பன்மொழி இணையத்தளம்’ உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ள பாராளுமன்ற இணையதளத்தில் எதிர்காலத்திலும் பல மேம்பாடுகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன.

அங்குரார்ப்பண நிகழ்வில் பாராளுமன்ற தகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்கள பணிப்பாளர் என்.பி.யூ. நவகமுவ, அதே திணைக்கள அதிகாரிகள், மற்றும் Techies நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கசுன் கமகே உள்ளிட்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

Share this Article
Leave a comment