புங்குடுதீவு பகுதியில் பல ஆண்டுகளாக அரசாங்க அல்லது தனியார் வங்கிகள் இல்லை எனவும், இதனால் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மக்கள் பாதிக்கப்படுகின்றனர் எனவும் சனநாயக தமிழரசுக் கூட்டமைப்பின் பிரமுகர் திரு. கருணாகரன் குணாளன் கூறியுள்ளார். வங்கிச் சேவைகள் பெறுவதற்காக புங்குடுதீவிலிருந்து சுமார் 13 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள வேலணைக்கு பயணிக்க வேண்டிய நிலை உள்ளது என அவர் தெரிவித்தார்.
வங்கிச் சேவை மற்றும் ஏ.டி.எம் (தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம்) இல்லாமல் உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி நாளாந்த கூலித்தொழிலாளர்களும் சேமிப்பை மேற்கொள்ள முடியாமல் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். குறைந்தபட்சம் ஏ.டி.எம் சேவையாவது புங்குடுதீவு பகுதியில் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்த அவசிய தேவையை பலமுறை பொது அமைப்புகள், பாடசாலை நிர்வாகங்கள், மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் வைத்தபோதும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. சிறிய அளவிலான பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவே அதிக செலவில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய சூழ்நிலையில் புங்குடுதீவு மக்கள் உள்ளனர்.
இந்நிலையில், புங்குடுதீவு சந்தையடி அல்லது குறிகாட்டுவான் பிரதான வீதியில் ஏ.டி.எம் இயந்திரம் அமைக்க தேவையான இடத்தை அல்லது கட்டிடத்தை தனது குடும்பத்தினர் அன்பளிப்பாக வழங்க தயாராக உள்ளதாகவும், தேவையற்ற செலவுகளை தவிர்க்க இந்த முயற்சிக்கு ஆதரவாக அரச மற்றும் தனியார் வங்கி நிறுவனங்கள் தொடர்பு கொள்ளுமாறு 0778945856 என்ற எண்ணில் தொடர்புகொள்ள வேண்டுமென்றும் திரு. கருணாகரன் குணாளன் கேட்டுக்கொண்டுள்ளார்.