பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு மீண்டும் விளக்கமறியல்!

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள்  இருவர் உட்பட 3 பேரை எதிர்வரும்  23  ஆம் திகதி திகதி வரை  தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற  நீதவான் அண்ணாத்துரை தஷ்ஷினி இன்று  (10/11) உத்தரவிட்டார்.

 2008 ம் ஆண்டு  கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக் கொலை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர் உட்பட  இருவர் காத்தான்குடியில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டமை, வவுணதீவு கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

 இந்த கொலைச் சம்பவத்துடன்  தொடர்புபட்ட ஏற்கனவே 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் காத்தான்குடியை சேர்ந்த இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான மொஹமட் சிபான், மொஹமட் சகீத், ஆகியோரை கடந்த கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்தனர்.

 இந்த 5 முக்கிய மனிதக் கொலைகளுடன் தொடர்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான லண்டனில் உள்ள காத்தான்குடியைச் சேர்ந்த மொஹமட் பாய்ஸ், உட்பட 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த  ஜூன் 17 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வழக்கு தாக்கல் செய்து  அவர்களை நீதிமன்றில்  ஆஜர்படுத்தப்பட்டு  தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர்.

 இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு இன்று திறந்த நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  சந்தேகநபர்களான இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான மொஹமட் சிபான், மொஹமட் சகீத், ஆகியோரை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிள்ளையானை காணொளி தொழில்நுட்பம் மூலம் ஆஜர்படுத்த முடியவில்லை என சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றில் எழுத்து மூலமான ஆவணத்தை சமர்ப்பித்தனர்.

 இதனைத் தொடர்ந்து பிள்ளையான் உட்பட 3 பேரையும் தொடர்ந்து எதிர்வரும் 23 ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், லண்டனில் உள்ள சந்தேக நபரான பொலிஸ் பாயிஸ் என்றழைக்கப்படும்  மொஹமட் பாய்ஸுக்கு தொடர்ந்து திறந்த பிடிவிறாந்து பிறப்பித்தார்.

Share this Article
Leave a comment