நெடுந்தீவு குறிகாட்டுவான் பயணிகள் சேவையில் ஈடுபட்டு வந்த வடதாரகை பயணிகள் படகுதிருத்தவேலை என தெரிவித்து சேவையிலிருந்து நிறுத்தப்பட்ட நிலையில் இதுவரைக்கும் மீள சேவையில் இணைக்கப்படவில்லை.
இதுவரைக்கும் திருத்தம் தொடர்பாக எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை. சிறிய திருத்தவேலை காரணமாகவே இப்படகு பயணிகள் சேவையிலிருந்து நிறுத்தப்பட்டதாகவும் அதை விரைவாக செய்து முடிக்கலாம் எனவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்ற போதும் அதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் இதுவரைக்கும் மேற்கொள்ளப்படவில்லை.
இதன் காரணமாக தொடர்ச்சியான பயணிகள் சேவையில் ஈடுபடும் குமுதினி படகானது விரைவில் ஓய்வெடுக்கும் நிலைக்கு தள்ளப்படும் நிலமை இருப்பதினால் வடதாரகை படகினை திருத்தம் செய்து மக்கள் சேவையினை மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் வேண்டி நிற்கின்றனர்.
இது தொடர்பாக பொறுப்பு வாயந்த வீதி அபிவிருத்தி அதிகார சபையோ , நெடுந்தீவின் அரச நிறுவனங்களோ ஆக்கபூர்வமான நடவடிக்கையினை எடுத்ததாக தெரியவில்லை என நெடுந்தீவு மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.