நெடுந்தீவு குறிகட்டுவான் இடையேயான கடற்போக்குவரத்து நெடுங்காலமாக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தமது போக்குவரத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள் கடந்த சில மாதங்களாக வடதாரகை படகு பழுதடைந்தமையால் வடதாரகையின் நேரத்திற்கு மாற்று படகுச் சேவை ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான நேர அட்டவணை மக்கள் பார்வைக்கு பொது இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆயினும் வாரத்தில் 07 நாட்களும் சரியான முறையில் இவ் நேர அட்டவணைக்கு ஏற்ப படகு சேவைகள் இடம் பெறுவதில்லை. சில சமயங்களில் மாலை 04.00 மணிக்கு புறப்படும் படகு நெடுந்தீவில் இருந்து புறப்பட வேண்டிய படகு புறப்படாமையினால் காலை 08.00 மணிக்கு குறிகட்டுவான் இறங்கு துறைமுகத்தில் இருந்து படகு புறப்படுவது தடைப்படுகின்றது.
இன்று மாலை 04.00 மணிக்கு நெடுந்தீவு இறங்கு துறைமுகத்தில் படகுச் சேவை இடம் பெறாமையினால் குறிப்பிட்ட மக்கள் 05.00 மணி வரை இறங்கு துறைமுகத்தில் காவல் இருந்து மீளவும் வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர்
வார இறுதி நாட்களில் நெடுந்தீவிற்கு வரும் நெடுந்தீவிற்கு வெளியில் கடமை புரியும் சிலர் இப்படகுச் சேவையால் பாதிக்கப்படுகின்றனர் திங்கள் காலை நெடுந்தீவில் இருந்து புறப்பட்டு தங்கள் கடமைகளுக்கு செல்ல முடியாத நிலைமை காணப்படுகின்றது
இது தொடர்பாக எதிர்வரும் மாதத்தில் படகு அட்வணைகள் போடப்படுகின்ற போது குறிப்பிட்ட நேரத்திற்கு படகு புறப்படுவதற்கான ஏற்பாடுகளை படகு உரிமையாளர்களுடன் கலந்துரையாடி உறுதிப்படுத்தி நேர அட்டவணைகளை காட்சிப்படுத்துகின்ற போது மக்களது சிரமங்கள் குறைவடைவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன
இறுதியாக நடைபெற்ற பிரதேச சபைக் கூட்டத்தில் இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டு எதிர்காலத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு சேவையில் ஈடுபடாத படகுகளிடம் தண்டப்பணம் அறவிடுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது ஆயினும் அது நடைமுறைப்படுத்தப்படுமா? என்பது மக்களது கேள்வியாக இருக்கின்றது பிரதேச சபை ஆரம்பத்தில் இருந்து பல தீர்மானங்கள் எடுக்கப்பட்ட போதும் அவை பின்னர் நிறைவேற்றப்பட்டனவா? என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது.