நெடுந்தீவு கல்விக்கோட்டத்தில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய ஆறு மாணவர்களும் இன்று (பெப்ரவரி 6) கெளரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வு பிரதேச செயலர் உயர்திரு எப்.சி.சத்தியசோதி அவர்களின் தலைமையில் காலை 10 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
முயற்சியாளர்களாகிய நீங்கள் வெற்றி இலக்குகளை நோக்கியதாக உங்கள் கல்வியை முன்னகர்தவும், நெடுந்தீவின் கல்வித் தந்தை என புகழாரம் சூடப்பெற்ற அதிபர் நவரட்ணசிங்கம் அவர்களை முன்னுதாரணமாக்கி வாழவும், இந்த் தீவுக்குப் பெருமைதேடித் தரும் மாணவர்களாக உயர்வீர்கள் என பிரதேச செயலர் தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டார்.
அதிபரின் மாணவரும் தற்போது அவுஸ்திரேலியாவில் வசிப்பவருமான மருதநாயகம் அவர்கள் பிரதேசசெயலகம் ஊடாக அனுப்பிவைத்த ஊக்குவிப்பு தொகையை நிகழ்வின்போது மாணவர்களுக்கு பிரதேச செயலர் வழங்கினார்.
அதிபர் சி.வி.ஈ.நவரட்ணசிங்கத்தின் 115ஆவது பிறந்த தினத்தையும் அவரது கல்விப்பணியை நினைவுகூரும் விதமாகவும் இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.