இந்துக்களின் வழிபாட்டு முறைகளில் மிக முக்கியான விழாக்களில் ஒன்று நவராத்திரி. பெண் சக்தியை போற்றும் உன்னத திருநாளாகும். இந்த நாட்களில் அனைத்து தெய்வங்களின் சக்தியும் பராசக்திக்குள் ஐக்கியம் ஆகும்.
நவராத்திரி பண்டிகை, நட்பு, ஒற்றுமை, நல்லிணக்கத்தை உருவாக்கும் பண்டிகையாகும். அம்பிகையின் பல்வேறு ரூபங்களை வழிபடும் ஒன்பது நாள் இரவிற்கு நவராத்திரி என்று பெயர்.
மகிஷாசுரன் அசுரன், பெண்ணை தவிர தனக்கு உலகில் வேறு சக்தியால் மரணம் நிகழக் கூடாது என வரம் பெற்றவன். இந்த வரத்தின் காரணத்தால் பல தீமைகள் செய்த மகிஷனுடன் மகாசக்தியான அம்பிகை போரிட்டு, வெற்றி பெற்ற நாட்களையே நவராத்திரி என்றும், அதன் இறுதி நாளை விஜயதசமி என்றும் நாம் ஆண்டு தோறும் கொண்டாடுகிறோம்.
நவராத்திரியின் ஒன்பது நாட்களில் முதல் மூன்று நாட்கள் அம்பிகையை துர்க்கையின் வடிவமாகவும், அடுத்த 3 நாட்கள் மகாலட்சுமியின் அம்சமாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியின் ரூபமாகவும் வழிபடுகிறோம்.
அதாவது இச்சா சக்தி, கிரியா சக்தி மற்றும் ஞான சக்தியின் வடிவமாக அம்பிகையை வழிபடும் நாளாகும்.வருடத்திற்கு நான்கு நவராத்திரிகள் வந்தாலும் புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரியே சாரதா நவராத்திரியாக நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.