நெடுந்தீவில் இருந்து வெளியிடங்களுக்கு செல்கின்ற போது நெடுந்தீவு இறங்கு துறைமுகத்தில் கடற்படையினரால் அனைவரது அடையாள அட்டைகளும் ஸ்கான் செய்யப்படுவதுடன், அடையாள அட்டை இல்லாத சிறுவர்கள் ஊடாக பதிவு செய்யப்பட்ட பின்னரே படகில் ஏற்றப்படுகின்றனர் அது போல் உள் வருகின்ற போதும் பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன
நெடுந்தீவில் இருந்து ஒரு மணி நேரம் கடற்பயணம் மேற்கொண்டு பலத்த களைப்பின் மத்தியில் குறிகட்டுவான் இறங்கு துறைமுகத்திற்கு வருகின்ற மக்களை மீளவும் குறிகட்டுவானிலும் பதிவு செய்கின்ற நிலமை கடந்த சில வாரங்களாக தொடர்கின்றது. பல்வேறு பொருட்களுன் வரும் மக்கள், சிறுவர்கள் வயோதிபர்கள் நோயாளிகள் அனைவரும் இதன் ஊடாக பல இடையூறுகளை அனுபவித்து வருகின்றார்கள் .
நெடுந்தீவில் இருந்து பதிவு செய்யப்பட்டு படகில் அனுப்பப்படுகின்ற பயணிகள் மீளவும் ஏன் குறிகட்டுவானிலும் பதிவு செய்யவேண்டும் என்பது நெடுந்தீவு மக்களது கேள்வியாக இருக்கின்றது. இடையில் யாரும் ஏறுவதற்கான சந்தர்ப்பம் காணப்படாத போது ஏன் இந்த அவல நிலை நெடுந்தீவு மக்களுக்கு?
கடற்போக்குவரத்து மட்டுமன்றி பதிவு நடவடிக்கைகளும் பிரயாணிகள் போக்குவரத்தில் இடையூறுகளை ஏற்படுத்துவதுதால் குறிப்பிட்ட நேரங்களில் தமது கடமைகளை நிறைவேற்ற முடியாத நிலமையும் காணப்படுகின்றது
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொண்டு குறிகட்டுவான் இறங்கு துறைமுகத்தில் மீளவும் பதிவு செய்யும் நடவடிக்கையை இரத்து செய்து மக்கள் போக்குவரத்திற்கு இயல்பான நிலமையை ஏற்படுத்த வேண்டும் என்பதே நெடுந்தீவு மக்களது எண்ணமாக காணப்படுகின்றது.