தாய் இறந்து 16வது நாள் மகன் விபத்தில் உயிரிழப்பு – உடல் உறுப்புகள் தானம்!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தாய் உயிரிழந்த நிலையில், தாயின் 16வது நாள் காரியத்தன்று விபத்தில் படுகாயமடைந்த மகன், மூளைச்சாவு அடைந்த நிலையில், உறுப்பு தானம் செய்து 3 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ள சம்பவம் திருப்பூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே மடத்தூர் கிராமத்த்தை சேர்ந்தவர் ராஜகோபால். விவசாயியான இவரது மனைவி விசாலாட்சி. இவர்களது மகன் பாஸ்கரன்(வயது 29). பாஸ்கரன் பேப்பர் ஆலை ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாலாட்சி உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், விசாலாட்சியின் 16ம் நாள் காரிய நிகழ்ச்சிக்கான பொருட்கள் வாங்க மகன் பாஸ்கரன், 11 மாத குழந்தை மற்றும் சகோதரியுடன் உடுமலைப்பேட்டை சென்றிருந்தார்.

அங்கு பொருட்கள் வாங்கி விட்டு ஊருக்கு திரும்பும் வழியில் அவர்கள் சென்ற கார் விபத்தில் சிக்கியது. இந்த கோர விபத்தில் பாஸ்கரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

மற்றவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், பாஸ்கரன் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் மூளைச் சாவு அடைந்ததாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதையடுத்து அவரது குடும்பத்தினர் மனிதநேய முடிவு எடுத்து பாஸ்கரனின் கண், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தானமாக வழங்க ஒப்புக் கொண்டனர்.

இதன் மூலம் மூன்று பேர் மறுவாழ்வு பெற இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் தாயின் 16 வது நாள் காரியத்துக்காக பொருள் வாங்க சென்றவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Article
Leave a comment