தண்ணிமுறிப்புக்குளத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வந்த வெலிஓயா பகுதியினை சேர்ந்த நன்னீர் மீனவர்களை இரு தினங்களுக்கு முன்னர் தண்ணிமுறிப்பு மீனவர்கள் பொலிஸாரிடம் பிடித்துக் கொடுத்தனர்.
அவர்களை பொலிஸார் கைதுசெய்தனர். தண்ணிமுறிப்பு மீனவர்களை விசாரணைக்கு வரும்படி அழைத்துவிட்டு அவர்களையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் முற்படுத்தி யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அனுப்பியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்தச் செயற்பாட்டை கண்டித்தும் மீனவர்களை விடுதலை செய்யக்கோரியும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று(ஓகஸ்ட் 7) காலை 10.00 மணியளவில் பாதிக்கப்பட்ட மீனவர்கள், அவர்களின் உறவினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்போது முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது. அதற்கு பதில் வழங்கிய அரசாங்க அதிபர் இரண்டு தடவைகள் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அவர்கள் மீன்பிடியில் ஈடுபட முடியாது என்ற தீர்மானம் இருக்கின்ற போதும் வெலிஓயா மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர் இருப்பினும் இது தொடர்பில் உரிய அமைச்சருக்கு தெரியப்படுத்தியுள்ளேன். உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார்.