யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் கடந்த செப்ரெம்பர் மாதம் 27 ஆம் திகதி யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் யாழ் மாவட்டத்தின் மீள்குடியேற்றம், வீடமைப்புக்களை வழங்குதல், காணிவிடுவிப்பு, தேசியவீடமைப்பு அதிகார சபையின் மூலம் புதிய வீடமைப்பு சோலர் மின்சக்தி சகிதம் வீடற்றவர்களுக்கு வீடு வழங்குவதற்கான மாவட்டத்திற்கான தேவைப்பாடு, வனவளத்திணைக்களம் மற்றும் வன விலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் உள்ள குடியிருப்புத் தேவை, பயிர்ச்செய்கைத்தேவைக்கு பயன்படுத்தப்பட்ட மற்றும் விடுபடவேண்டிய காடுகள் வரையறுக்கப்பட்டு மாவட்ட மட்டத்தில் எடுக்கப்பட்ட ஆலோசனைகள் அதற்கு மேலதிகமாக எடுக்கப்பட வேண்டிய முடிவுகள், யாழ் மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கான முடிவுகள், வடக்கு மாகாணத்துக்கான புனர்வாழ்வு மையம் அமைப்பதற்கான கட்டடம் தொடர்பான முன்னேற்பாடு, வறட்சி காரணமாக குடிநீர்ப்பிரச்சினை , குடிநீரைச் சேமிப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கை குளங்களை தூர்வாா்தல் வேலைக்கான உணவு உதவித்திட்ட கோரிக்கைக்கான திட்ட முன்மொழிவுகள், குடிநீர் விநியோக திட்ட முன்மொழிவுகள், மாவட்ட டெங்கு கட்டுப்பாடு சம்பந்தமாக எடுக்க வேண்டிய முன்னாயத்த, எதிர்கால நடடிக்கைகள், இளம் தொழில் முனைவோருக்கான காணி வழங்கல் தொடர்பாக பிரதேச செயலாளர்களால் எடுக்கப்பட்ட முடிவுகள், தொண்டைமானாறு அணைக்கதவு இயக்கம் மற்றும் தொண்டைமானாறு கடல்நீரேரி நீரேந்துப் பிரதேசங்கள் மற்றும் பொது விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.
யாழ் மாவட்டத்தின் மீள் குடியேற்றம் கலந்துரையாடப்பட்டதோடு, காணியற்றவர்களுக்கு அரச காணிகள் அளவீடு செய்யப்பட்டு காணிகள் வழங்குதல் முகாம்களில் வசிப்பவர்களில் தகுதியானவர்ளுக்கு வீடுகள் வழங்கும் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் யாழ் மாவட்டத்தில் 20934 வீடுகளின் தேவைப்பாடு காணப்படுவதாதவும் இவ்வருடம் 696 வீடுகள் பல்வேறு நிதிஅமைப்புக்களின் உதவியுடன் புதிதாக கட்டப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வறட்சி காரணமாக குடிநீர்ப்பிரச்சினையால் பாதிக்கப்படும் இடங்களுக்கு மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் பிரிவினரால் 9539 குடும்பங்களுக்கு ஏறத்தாழ 10 இலட்சம் லீற்றர் வரையில் குடிநீர் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
அத்தோடு நன்நீர் மீன்வளர்ப்பு, உலக உணவுத் திட்டத்தின் அறிக்கையில் கடலுணவு எதிர்காலத்தில் குறைந்துவருமென குறிப்பிட்டுள்ளது இதனால் நீர்வேளாண்மையை முன்னெடுத்தல் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
வன பாதுகாப்பு திணைக்களத்தினால் விடுவிக்கப்படவேண்டிய பகுதிகள், சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் சட்டவிரோதமாக கால்நடைகளை கொண்டுசெல்லல் தொடர்பாக ஆராயப்பட்டது. மேலும், மக்களின் ஒத்துழைப்புடன் மணலை கட்டுமாணத்தேவைகளுக்கு எடுத்தல் தொடர்பாகவும் தெரிவிக்கப்பட்டது.
அத்தோடு போதைப் பொருள் பாவனையினை கட்டுப்படுத்துதல் தொடர்பாக கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக புனர்வாழ்வு மையத்தினை வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள கனகராயன்குளத்தில் அமைத்தல் தொடர்பாக முன்மொழியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்திற்கான குடிநீர் விநியோகம் தொடர்பாக கடந்த ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக கீழ் பாலியாறிலிருந்து யாழ்ப்பாண மாவட்டத்திற்கு குடிநீர் கொண்டுவருதல் தொடர்பாக ஜனாதிபதி செயலகமட்டத்தில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, சாதகமான முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன. மாவட்ட டெங்கு கட்டுப்பாட்டுக் குழு அறிக்கை தொடர்பாக ஆராயப்பட்டதோடு, நேற்றைய தினத்திலிருந்து எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு டெங்கு கட்டுபாட்டு வாரம் பிரதேச மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வருடாந்த அபிவிருத்தி திட்ட மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் ஒவ்வொரு அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
இதில் கௌரவ வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ த.சித்தார்த்தன், ஜனாதிபதி செயலகத்தின் வடக்கு அபிவிருத்திக்கு பொறுப்பான மேலதிக செயலாளர் எல்.இளங்கோவன், முன்னாள் வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர்கள், மத்திய மற்றும் மாகாண சபையின் திணைக்களத்தலைவர்கள், வடக்கு மாகாணசபை அமைச்சின செயலாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதிகள், பிரதிப் பொலீஸ்மா அதிபர், வட பிராந்திய கடற்படையின் பிரதி கடற்படைத்தளபதி, விஷேட பொலிஸ் அதிரடிப்படை அதிகாரி, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தரகள், பிரதேச செயலாளர்கள், அரச மற்றும் அரசாா்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தரகளும் கலந்து கொண்டனர்.