புதிய அலை கலை வட்டம் எவோட்ஸ் – 2022 விருது மற்றும் கலாமித்ரா விருது வழங்கும் விழாவில் கவிதைக்கான சர்வதேச விருதை நெடுந்தீவைச் சேர்ந்த கவிஞர் பசுவூர் கோபி (ஐயாக்குட்டி கோவிந்தநாதன்) பெற்றுக்கொண்டார்.
43 ஆவது ஆண்டில் காலடி பதிககும் புதிய அலை கலை வட்டத்தின் விருது வழங்கும் விழா கடந்த 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் உள்ள தபால் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் புரவலர் ஹாசிம் உமர் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். சிறப்பு விருந்தினராக கொழும்பு மாநகர சபைப் பிரதி முதல்வர் எம்.ஐ.எம்.இக்பால் கலந்து கொண்டார்.
புதிய அலை கலை வட்டத்தின் எவோட்ஸ் கலாசார போட்டித் தொடரில் கவிதைப் போட்டிகள் உள்நாட்டு ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் நடத்தப்படுகின்றது.
உள்நாட்டு ரீதியிலான கவிதைப் போட்டியில் மூதூரைச் சேர்ந்த தெ.கரிகரன் முதலாம் இடத்தையும், இறக்காமத்தைச் சேர்ந்த முஜாத் முஹமட் இரண்டாம் இடத்தையும், நுவரெலியாவைச் சேர்ந்த கே.சந்திரகுமார் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
சர்வதேச ரீதியில் நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் நெதர்லாந்தில் வசிக்கும் நெடுந்தீவுக் கவிஞர் பசுவூர் கோபி (ஐயாக்குட்டி கோவிந்தநாதன்) முதலாம் இடத்தையும், தமிழ்நாட்டைச் சேர்ந்த வீ.மீனாட்சி இரண்டாம் இடத்தையும், தமிழ்நாட்டைச் சேர்ந்த மதுரம் ராஜ்குமார் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.