கொழும்பில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.புறக்கோட்டை இரண்டாவது குறுக்குத் தெருவில் உள்ள கடை ஒன்றிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
ஏழு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. தீப்பரவலினால் கடுமையான புகை சூழ்ந்துள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரியவருகின்றது. ஒரு சிலர் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டுள்ளவர்களை காப்பாற்றும் பணிகளில் தீயணைப்பு மற்றும் கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கட்டிடம் முழுமையாக சேதமடைந்துள்ளது. தீ விபத்திற்குள்ளான கட்டடம் ஒரு ஆடை விற்பனையகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று(ஒக்ரோபர் 27) வெள்ளிக்கிழமை என்பதன் காரணமாக, காலையில் ஊழியர்கள் வழிபாட்டில் ஈடுபட்ட நிலையில் தீப்பற்றியிருக்கலாம் என அருகிலுள்ளவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
உடனடியாக தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாமையே முழு கட்டிடத்திற்கும் தீ பரவியமைக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், தீ பரவலுக்கான உறுதியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. அத்துடன் 22 பேர் வரையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.