இலங்கையில் உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டைத் தடுப்பதற்கு ஆதரவாக பிரான்ஸ் நிதி உதவியொன்றை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச நிறுவனமான யுனிசெஃப் மூலம் சுமார் 500,000 யூரோக்களை (17 கோடி ரூபாய்) வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பங்களிப்பு இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து சேவைகளை வழங்க உதவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் பொருளாதார நிலைமையினால் பல இளம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகள் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 6-23 மாதங்களுக்கு இடைப்பட்ட 1,20,000 குழந்தைகளுக்கு நுண்ணூட்டச் சத்துகளை வழங்குவது மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டைத் தடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை “பிரான்ஸ் அரசாங்கம் இலங்கையுடன் நீண்டகால பங்காளித்துவத்தை கொண்டுள்ளதுடன், யுனிசெஃப் ஊடாக வழங்கும் இந்த பங்களிப்பு, குழந்தைகள் மற்றும் இலங்கை மக்களுக்கான அத்தியாவசிய தேவையாக கருதுகின்றோம் ” என இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் Jean-François PACTET தெரிவித்துள்ளார்.
குறிப்பாக குழந்தையின் வாழ்க்கையின் முதல் இரண்டு ஆண்டுகளில் ஏற்படும் தாக்கம் அவர்களின் வாழ்நாள் முழுவதும் தொடரும் என வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் ஊட்டச்சத்து குறைபாடு உடனடியாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால், குழந்தையின் உடல் மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியை பாதிப்படைய செய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.