அநுராதபுரம் புனித நகரில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உட்பட ஏழு பேரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
புனித நகரப் பகுதியில் போராட்டத்தைத் தொடர்ந்ததன் மூலம் முன்னைய நீதிமன்ற உத்தரவுகளை அவமதித்து மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் எழுவரையும் மனநலப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறும், அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளார்களா என்பதைக் கண்டறிய விசேட பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அநுராதபுர புனித நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரியும் ருவன்வெலிசாய அருகே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நேற்று வியாழக்கிழமை (12/11) இராஜாங்கனயே சத்தாரதன தேரர் தலைமையிலான குழுவினர் அவ்விடத்திற்கு வந்தபோது இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.