கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பானமுன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (பெப். 07) மாவட்ட செயலக அரசாங்க அதிபர்அலுவலகத்தில் நடைபெற்றது .
எதிர்வரும் மார்ச் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கச்சத்தீவு புனிதஅந்தோனியார் திருவிழாவுக்கு இலங்கை கடற்படையினரின் ஒத்துழைப்பு பிரதானமானது எனவும் இத் திருவிழாவுக்கு சிறப்புற நடைபெற அனைவரின் ஒத்துழைப்புக்களையும் வழங்குமாறு கேட்டுக் கொண்டதுடன் , கடந்த ஆண்டுநடைபெற்ற திருவிழா சிறப்பாக நடைபெற்றமைக்கு உயர்ந்த ஒத்துழைப்பினைவழங்கிய கடற்படை மற்றும் துறைசார்ந்த திணைக்களங்களுக்கு தமது நன்றியினையும் அரச அதிபர் தெரிவித்திருந்தார்.
இன்றைய கலந்துரையாடலில் இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து வருகைதரும் பக்தர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கான தங்குமிட வசதிகள், கூடாரங்கள், உணவு வசதிகள், பாதுகாப்பு, சுகாதாரத் தேவைகள், மலசல கூடவசதிகள், குடிநீர் தேவைகள், பாதுகாப்பு, ஒலி, ஒளி வசதிகள், கடல் மற்றும் தரைப் போக்குவரத்து ஒழுங்குகள், தனியார் கடற்போக்குவரத்து படகுகளின்கட்டண நிர்ணயம் மற்றும் கழிவு முகாமைத்துவம் தொடர்பாக விரிவாககலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது யாழ்ப்பாண மறை மாவட்ட குரு முதல்வர் ஆயர் வணக்கத்துக்குரிய அருட்தந்தை P.J. ஜெபரட்ணம், நெடுந்தீவுக்கான அருட்தந்தை பி. பத்திநாதர், இந்திய துணைத் தூதுவர் இ. நாகராஜன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), வட மாகாணப் பிரதி கடற்படை கட்டளை தளபதி, பிரதிப் பொலிஸ்மா அதிபர், 512 வது பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி, திணைக்களத் தலைவர்கள், யாழ் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவி மாவட்ட செயலாளர், நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்றுறை என்பவற்றின் பிரதேச செயலாளர்கள் , கடற்படை, இராணுவப்படை அதிகாரிகள், வைத்திய அதிகாரிகள், துறைசார்திணைக்களங்களின் தலைவர்கள், நெடுந்தீவு இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.