டொலரின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலையும் அதிகரித்து வருவதாக தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, இன்று (ஜூலை 25) 22 காரட் தங்கத்தின் விலை 167,000 ரூபாவாகவும், 24 காரட் தங்கத்தின் விலை 182,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
கடந்த வாரம் 22 காரட் தங்கம் ஒரு பவுன் விலை 165,000 ரூபாவாகவும், 24 காரட் தங்கம் ஒரு பவுன் 178,000 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.
இதேவேளை, நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (ஜூலை 25) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 321.10 ரூபாவில் இருந்து 323.03 ரூபாவாகவும், விற்பனை விலை 334.55 ரூபாவில் இருந்து 336.16 ரூபாவாக அதிகரித்துள்ளது.
வளைகுடா நாணயங்கள் உட்பட பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது.
இதனிடையே, இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின் அடிப்படையில் இலங்கையின் வரலாற்றில் அதிகூடிய வட்டிக் கொடுப்பனவுகள் கடந்த வருடம் பதிவாகியுள்ளதாக Verité Research Institute சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி, 2015 ஆம் ஆண்டில் 35 சதவீதமாக இருந்த அரசு வருவாயை அடிப்படையாகக் கொண்ட வட்டி விகிதம் 2022 ஆம் ஆண்டில் 78 சதவீதமாக உயர்ந்துள்ளது.
எவ்வாறாயினும், 2019 மற்றும் 2020 க்கு இடையில், வட்டி கொடுப்பனவுகள் முறையே 47 சதவீதத்திலிருந்து 71 சதவீதமாக கணிசமான அதிகரிப்பைக் காட்டினாலும், அரசாங்கத்தின் வருமானம் கணிசமாகக் குறைந்துள்ளது.
அதற்குக் காரணம் அன்றைய கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வரிக் குறைப்புக் கொள்கையாகும் என Verité Research Institute சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும், கடந்த ஆண்டு ஏற்பட்ட இந்த நிலைமை அரசாங்கத்தின் மீது கணிசமான கடன் சுமையைக் அதிகரிக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.