உள்ளூராட்சிச் சபை தேர்தலுக்காக வேட்பு மனுத்தாக்கல் செய்த வேட்பாளர்கள் அனைவரும் தாம் முன்னர் பணிபுரிந்த நிறுவனங்களிலேயே சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என பிரதமரும் உள்நாட்டலுவல்கள் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று(ஒக்ரோபர் 19) வியாழக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளூராட்சி சபை தேர்தலுக்காக வேட்பு மனுதாக்கல் செய்திருந்த வேட்பாளர்கள் தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்த பிரதமர் தினேஷ் குணவர்தன மேலும் கூறுகையில், எதிர்க்கட்சியில் எவரும் ஆலோசனைக் கூட்டத்திற்கு வரவில்லை என்று நீங்கள் சொன்னது பொய். அவர்கள் வந்துள்ளதாக தகவல்கள் உள்ளன.
எதிர்க்கட்சி என்பது நீங்கள் மட் டும் அல்ல. எதிர்க்கட்சியில் பல உறுப்பினர்கள், குழுக்கள் உள்ளன. அந்தவகையில் எம் மீது குற்றம் சாட்டும் போது சரியான தகவல்களை பெற்றுக் கொண்டு அதன்பிறகு பேசவேண்டும். எப்போதும் இயல்பாக பொய் சொல்ல பழகியுள்ளது போன்று தொடர்ந்தும் செயற்பட வேண்டாம். நேற்றும் இன்றும் கூட சபையில் பொய் தகவல்களையே தெரிவித்துள்ளீர்கள்.
உண்மையில் நாம் தேர்தல் ஆணைக்குழுவை அழைத்து நானும் எனது இராஜாங்க அமைச்சரும் ஆணைக் குழுவின் உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்.அதன் போது ஆணைக்குழுவானது வேட்பு மனுத்தாக்கல் செய்து உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட விருந்த அனைத்து அரசாங்க ஊழியர்கள் மற்றும் அனைவருக்கும் அவர்கள் முன்பு கடமை புரிந்த நிறுவனங்களிலேயே சேவையைத் தொடர வாய்ப்பு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.
அந்த விடயம் தெரியாமலே எதிர்கட்சித் தலைவர் சபையில் தொடர்ந்தும் பெரிதாக குரல் எழுப்பி வருகின்றார். நாம் ஒவ்வொரு பிரச்சினையாக தீர்வு கண்டு வரும் நிலையில் பொய்யான தகவல்களைக் கொண்டு வந்து அவர் குற்றம்சாட்டி வருகிறார்.நாட்டிலுள்ள சட்டங்கள் நியதிகளின்படி அதற்கான செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்பதை அவர் அறிந்து கொள்ள வேண்டும் என்றார்.