உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் தீர்மானத்துக்கு இணங்காத சில அரசாங்க அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(செப்ரெம்பர் 20) ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்குத் தலைமைதாங்கிய சஹ்ரான் தொடர்பான சில காணொலிகள் எவ்வாறு கசிந்தன என்பது தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றது.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் எந்தப் பொலிஸ் அதிகாரியும் குற்றவாளியாகக் குறிப்பிடப்படவில்லை. அவர்கள் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய பரிந்துரைகளே முன்வைக்கப்பட்டுளு்ளன.
குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது தொடர்பாக சட்டமா அதிபரே தீர்மானம் எடுத்துள்ளார். இந்தத் தாக்குதல் சம்பவங்களுக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்த்தன பொறுப்புக் கூற வேண்டும் என்று விசாரணை அறிக்கையில் எங்கும் குறிப்பிடவில்லை. உயர்நீதிமன்றமே அவரைக் குற்றவாளி என்று கண்டறிந்து, இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது – என்றார்.