இறுதியாக உயிரிழந்த கொரோனா தொற்றாளர் தொடர்பில் சுகாதார அமைச்சு விடுத்துள்ள செய்தி
நாட்டில் இருபத்து இரண்டாவதாக பதிவான கொரோனா உயிரிழப்பை, கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் பட்டியலில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆகும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 31ஆம் திகதி பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 27 வயதான இளைஞர் ஒருவர் இன்றைய தினம் உயிரிழந்திருந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த நபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், குறித்த நபர் உயிரிழந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையின் மூலம், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே, குறித்த உயிரிழப்பை, கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் பட்டியலில் இணைக்க முடியாது என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.