.நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பினரால் இயற்கை உரம் தயாரிக்கும் இயந்திரம் நெடுந்தீவு ஊரும் உறவும் விவசாய மேம்பாட்டு பிரிவினரிடம் கையளிக்கும நிகழ்வு கடந்த சனிக்கிழமை (ஓக்டோபர் – 16) நெடுந்தீவு பிரதேச செயலக முன்னறில் ஊரும் ஊறவும் அமைப்பின் உறுப்பினர் திரு.ரஜீவ் பிரகாஸ் அவர்களின் தலமையில் இடம் பெற்றது.
தற்போது இலங்கை அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் சுபிட்சத்தின் நோக்கு எனும் செயற்றிட்டத்தின் கீழ் நிலைபேறான இயற்கை விவசாயத்தின் ஊடாக எதிர்காலத்தில் ஆரோக்கியமான சமுகத்தினை உருவாக்கும் செயற்றிட்டத்தின் கீழ் இவ் இயற்கை உரம் தயாரிக்கும் இயந்திரம் நெடுந்தீவில் வழங்கப்பட்டமை வரவேற்கத்தக்கது.
வட்டக்கச்சி கல்மடு நகரில் இயங்கி வரும் உவி மோட்டார்ஸ் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இவ் இயந்திரம் அவர்களால் நேரடியாக கொண்டு வரப்பட்டு அவர்கள் ஊடாக அதனை இயக்குவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு கையளிக்கப்பட்டது. தொடர்ச்சியாக இவ் இயந்திரம் பாவனைப்படுத்தப்படுவதன் ஊடாக எதிர்காலத்தில் நெடுந்தீவு பெயரில் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு உள்ளுர் தேவைகள் நிறைவு செய்யப்படுவதுடன் ஏற்றுமதி செய்வதற்கான நிலமையும் ஏற்பட வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.
உவி மோட்டார்ஸ் நிறுவனமானது விவசாய உள்ளீடுகளை தயரிக்க்கின்ற விற்பனை செய்கின்ற நிறுவனமாக காணப்படுவதுடன் இதன் பணிப்பாளராக இருந்து இவ் இயந்திரத்தினை தயாரித்த திரு.கண்ணன் அவர்களும் எமது நெடுந்தீவினை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊரும் உறவும் அமைப்பினால் தற்போது விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது அதனை மேலும் வலுப்படுத்தவும் இச் செயற்றிட்டம் வழங்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. இவ் இயந்திரம் டிரக்கர் வாகனத்தில் பொருத்தப்பட்டு தேவையான இடங்களுக்கு கொண்டு சென்று மேற்கொள்ளக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இச் செயற்றிட்டம் சரியான முறையில் இயங்குகின்ற போது நெடுந்தீவில் இயற்கை உரம் தயாரிக்கப்படுவதுடன் தீவும் சுத்தமாகவும் அழகாகவும் காட்சியளிக்க கூடிய நிலமை ஏற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இயற்கை உரம் தயாரிக்கும் இயந்திரம் வழங்கும் நிகழ்வில் நெடுந்தீவு பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திரு.எவ்.சி.சத்தியசோதி அவர்கள், முன்னாநாள் வடகிழக்கு ஆரம்ப கல்விப்பணிப்பாளர் திரு.செ.மகேஸ் அவர்கள், பிரதேச சபை தலைவர் திரு.சசிகுமார் அவர்கள், முன்னாள் பிரதேச சபை தவிசாளர் திரு.எஸ்.பி. அருளப்பு அவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.