இந்த காற்றுச் சுழற்சியானது எமககு மழை கிடைக்க கடவுள் உருவாக்கியதாகவே கருதுகின்றேன் – நாகமுத்து பிரதீபராஜா –

SUB EDITOR
SUB EDITOR
3 Min Read

1. இன்றைய தினம்(09.11.2025) பருத்தித்துறைக்கு கிழக்காக 377 கி.மீ. கிழக்காக வங்காள விரிகுடாவில் புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது.

2. உண்மையில் என்னைப் பொறுத்தவரை இந்த காற்றுச் சுழற்சி எங்களுக்கு மழை கிடைக்க கடவுள் உருவாக்கிய காற்றுச் சுழற்சியாகவே கருதுகின்றேன். ஏனெனில் இக்காற்றுச் சுழற்சி வலுவிழக்க செய்யும் பல காரணிகள் வங்காள விரிகுடாவில் உள்ளன. குறிப்பாக இந்து சமுத்திர வெப்பச் சுட்டெண் எதிர்மறையாக உள்ளமை இதற்கு பெரும் பலவீனமாகும். ஆனாலும் அது பல்வேறு இடங்களுக்கு அலைந்து திரிந்து தன்னை உயிர்ப்புடன் வைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3. இது எதிர்வரும் 18ம் திகதி வரை வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு கிழக்காக, தென்கிழக்காக என அங்குமிங்கும் அலைந்து இலங்கைக்கு கீழாக குமரிக்கடலை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4. மீண்டும் எதிர்வரும் 19ம் திகதி இந்தோனேசியாவின் பண்டா ஆச்சே மாநிலத்திற்கருகே வங்காள விரிகுடாவில் ஒரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளது. தற்போதைய நிலையில் இது புயலாக மாறி தமிழ்நாட்டில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இத்  தாழமுக்கத்தின் விருத்தி, கரையைக் கடக்கும் இடம் என்பனவற்றை எதிர்வரும் 15 ம் திகதிக்கு பின்னரே உறுதிப்படுத்த முடியும்.

5. இத்தாழமுக்கமும் உருவாக்குவதற்கான ஏது நிலைகள் குறிப்பாக மேடன் ஜூலியன் அலைவு, இந்து சமுத்திர வெப்பச் சுட்டெணின் நேர்மறைத் தன்மை போன்றவை சாதகமில்லாத நிலையிலும் இந்த தாழமுக்கம் றொஸ்பி அலைகளின் செல்வாக்கினால் உருவாகுகின்றமை குறிப்பிடத்தக்கது.    (றொஸ்பி அலைகள்

றொஸ்பி அலைகள் (Rossby waves) என்பவை வளிமண்டலம் மற்றும் கடலில் காணப்படும் பெரிய, இயற்கையான அலைவு இயக்கங்கள் ஆகும். இவை பூமியின் சுழற்சியின் காரணமாக உருவாகின்றன.

இவை முனைவு  முன்  ஜெட் நீரோட்டத்துடன் (polar-front jet stream) தொடர்புடைய பெரிய கிடையான அலைவுகள் ஆகும். இது குளிர்ந்த முனைவுக் காற்றை அயனமண்டலக் காற்றில் இருந்து பிரிக்கிறது. வானிலையில், குறிப்பாக வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதிலும், புயல் அமைப்புகளின் நகர்விலும் இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இவற்றை அடையாளம் கண்டு விளக்கிய கார்ல்-குஸ்டாஃப் ஆர்விட் றொஸ்பி (Carl-Gustaf Arvid Rossby) என்பவரின் பெயரால் அழைக்கப்படுகின்றன)

6. இதனால் எதிர்வரும் 10.11.2025 அன்று முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

7.  இவ்வாண்டுக்கான வடகீழ்ப் பருவமழை எதிர்வரும் 12.11.2025 முதல் அதிகரிப்பதோடு தொடர்ச்சியாக கிடைக்கும் வாய்ப்புள்ளது.

8. எதிர்வரும் 27.11.2025 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை தொடரும்.

9. கடந்த பல வருடங்களாக நவம்பர் 25,26,27ம் திகதிகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் கன மழையைப் பெறுவதுண்டு. இவ்வருடமும் அது தொடரும்.

10. அண்மித்த காலங்களில் பல புயல்கள் பல பிரதேசங்களில் நிகழ்ந்து அந்த பிரதேசங்கள் பல்வேறு வகையான அழிவுகளை சந்தித்து வருகின்றன. உதாரணமாக இன்றைய தினம் வட மேற்கு பசிபிக்கில் உள்ள ஃபங்-வோங் (Typhoon- Fung-Wong), பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமை தாக்கிய கல்மேகி (Typhoon- Kalmaegi ) கரீபியன் தீவுகளைத் தாக்கிய மெலிசா ( Hurricane- Melissa) போன்றவற்றை குறிப்பிடலாம். ஆகவே அத்தகைய புயல்கள் தோன்றாமல் தனித்து எங்களுக்கு மழை கிடைத்தால் போதும். ஏனெனில் எங்கள் வாழ்வும் வளமும் ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கும் வடகீழ்ப் பருவக்காற்று மழையிலேயே தங்கியுள்ளது. ஆனால் தாழமுக்க நிகழ்வுகள் இல்லாமல் எங்களுக்கு கன மழை இல்லை என்பதே யதார்த்தம்.

Share this Article