இந்தியாவின் காரைக்காலுக்கும், யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பது தாமதமாகும் என்று அறியமுடிகின்றது.
இந்தக் கப்பல் சேவையை எதிர்வரும் மே மாதம் நடுப்பகுதியிலேயே ஆரம்பிக்க முடியும் என்று கப்பல் சேவையை முன்னெடுக்கவுள்ள இன்ட்சிறி பெரி சேர்விஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார்.
இந்தக் கப்பல் சேவைகளை கடந்த மாதம் ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆயினும் துறைமுகக் கட்டமைப்புப் போன்ற காரணங்களால் இந்த மாதம் 29ஆம் திகதியே கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது இந்தியத் தரப்பில் இருந்து சில அனுமதிகள் கிடைப்பது தாமதமாகியுள்ளதால் மே மாத நடுப்பகுதியிலேயே கப்பல் சேவையை ஆரம்பிக்க முடியும் என்று கூறப்படுகின்றது.
இந்தக் கப்பல் சேவையில் ஒரே தடவையில் 150 பயணிகள் பயணிக்க முடியும். ஒரு வழிக் கட்டணமாக 50 டொலர் அறவிடப்படவுள்ளது.