நாட்டின் உள்நாட்டு ஆயுர்வேத மருத்துவத்துறையை வலுப்படுத்தும் நோக்கில், சமூக சுகாதார மருத்துவ அதிகாரிகள் உட்பட 303 பட்டதாரிகளை இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவைக்கு நியமிக்கும் நிகழ்வு நாளை திங்கட்கிழமை (நவம்பர் 03) நடைபெறவுள்ளது.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் கொழும்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
2018 ஆம் ஆண்டு முதல் உள்ளூர் ஆயுர்வேத மருத்துவத் துறைக்கு மருத்துவ அதிகாரிகள் அதிக அளவில் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் ஆயுர்வேத சேவைகளின் எதிர்கால செயற்திறனை மேம்படுத்துதல், நோயாளர் பராமரிப்பின் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவையில் முதன்மை தர மருத்துவ அதிகாரி பதவிகளுக்கான தற்போதைய வெற்றிடங்களை நிவர்த்தி செய்தல் என்பவற்றை நோக்காக கொண்டு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின் கீழ் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள மத்திய மற்றும் மாகாண சபை ஆயுர்வேத வைத்தியசாலைகளில் ஆயுர்வேத நிபுணர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த ஆயுர்வேத மருத்துவர்களின் மேற்பார்வையின் கீழ் ஒரு வருட விரிவான பயிற்சியை பெற்றவர்களுக்கே இந்த நியமனம் வழங்கப்படவுள்ளது.
மேலும், இலங்கையில் தொற்றும் மற்றும் தொற்றா நோய்கள் பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை வலுப்படுத்தவும், சுகாதாரப் பாதுகாப்பை விரிவுபடுத்துவதற்காக சிறுநீரக நோய்கள் அதிகமாக உள்ள பகுதிகளுக்கு இந்த ஆயுர்வேத மருத்துவர்களை அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.