யாழ்ப்பாண மண்ணில் இருந்து உருவாகி, அபார கிறிக்கெற் திறமையால் சர்வதேச அரங்கில் மிளிர்ந்து வரும் இளம் வீரர் விக்னேஸ்வரன் ஆகாஷ் 19 வயதுக்கு உட்பட்ட இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்து யாழ். மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
ஓமானில் நடைபெறவுள்ள 2026ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிறிக்கெற் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியில் ஆகாஷ் இடம்பெற்றுள்ளார்.
சிறந்த லெக்-பிரேக் கூக்ளி சுழல் பந்து வீச்சாளரான இவர், பந்து வீச்சு திறமையால் கிறிக்கெற் இரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
வங்காளதேஷ் இளையோர் அணிக்கு எதிரான தொடரில் ஒரு போட்டியில் 35 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றியமை இவரது சிறப்பான பந்துவீச்சு திறமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது.
அத்துடன், மேற்கிந்தியத தீவுகள் மற்றும் இந்திய இளையோர் அணிகளுக்கு எதிரான சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்று திறமையையும் அனுபவத்தையும் வளர்த்து கொண்டுள்ளார்.
மன்னார் மாவட்ட 19 வயதுக்கு உட்பட்ட அணிக்காக விளையாடி திறமையை வெளிப்படுத்திய ஆகாஷ், கொழும்பு புனித சூசையப்பர் கல்லூரி அணிக்காகவும் விளையாடி உள்ளார். தற்போது BRC கழக அணியை பிரதிநிதித்துவப்படுத்தி கிறிக்கெற் பயணத்தைத் தொடர்ந்து வருகிறார்.
யாழ்ப்பாணத்தின் இளம் தலைமுறையினருக்கு நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிக்கும் விக்னேஸ்வரன் ஆகாஷ், எதிர்காலத்தில் இலங்கை தேசிய அணியிலும் இடம்பிடித்து மேலும் பல சாதனைகளைப் படைக்க வேண்டும் என்பதே இரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.