நெடுந்தீவில் 50 வருடங்கள் கடந்தும் ஆன்மீகப்பணி செய்யும் மரிஸ்ரெலாவை அவரது 62 ஆவது பிறந்த தினத்தில் (23/05/2024) கெளரவிக்கும் ஜீவாவின் (யேசுதாசன் ஜீவராஜ் – நெடுந்தீவு) சிறுகதை..
‘காலடிக்குள் கோயில் பூசைக்கும் நேரமாகுது பிந்தியா வாறாது.
சுவாமிமார் வந்திட்டினம் பூசையுடுப்பும் அடுக்கேல்ல…….
பூசை பாத்திரங்களும் எடுத்துவைக்கேல்ல..
அலுமாரி திறப்பை கொண்டுபோறனீங்கள் நேரத்துக்கெல்லோவந்துவிடவேணும்…’என்று சொல்லி பங்குச்சுவாமியார் சத்தமிட்டார்.
‘ இல்ல பாதர்… இல்லயுங்க பாதர்… எல்லாம் எடுத்துவச்சிற்ருத்தான்போனனான்… சின்ன சிஸ்ரர் எல்லாமே சரியெண்டு சொன்னாப்பிறகுதான்வீட்டுக்கே போனனானுங்க பாதர்… எண்டு ஏதோ வாய்க்கு வந்தமாதிரிபிசத்திக்கொண்டவள் நான்கு நான்கரை மணிக்கெல்லாம் திடுக்கிட்டுமுழித்துக்கொண்டாள்.
முதல்நாள்தான் கோயிலை கூட்டிப்பெருக்கி, பாதரின் பூந்தோட்டத்துக்குதண்ணியூற்றி, பூசைக்கான ஆயத்த வேலைகளையெல்லாம் பார்த்ததில் பாவம்அவளும் கொஞ்சம் கழைத்துத்தான் கண்ணயர்ந்துபோனாள்.
தன் அருகினில் கோட்டையை பிடித்த கட்டியக்காரன்கள்போல் அயர்ந்துதூங்கிக்கொண்டிருந்த மாகிறற்ரின் சின்னவங்களை, பூசைக்கு எழுப்புவோமா? விடுவோமா? என்பதற்கான அனுமதியை சுவரிலிருந்த மணிக்கூடு அவளுக்கு வழங்கவேயில்லை. அதுவும் உயிரூட்டம் கூடிக்குறைந்து அப்பப்போஆடிக்கொண்டிருந்தது.
பூசை என்பது அவளுக்கு கொண்டாட்டம். அதிலும் சஞ்சுவாங்கோயில்ல ஞாயிறுபூசையெண்டது இனம்புரியாத சந்தோசமாயிருந்தது. அதற்கான ஆயத்தபணிகளை இரண்டு மூண்டு நாட்களுக்கு முன்னமே தொடங்கிவிடுவாள். இண்டைக்கு நேற்றல்ல ஐம்பது ஐம்பத்தைந்து ஆண்டுகளாய் அவளுக்கு அதுபழக்கப்பட்டதொன்று.
சரி, எழும்பீட்டம், நிறைய வேலை கிடக்கு….ஒவ்வொன்றாய் அவள்மனக்கண்முன்னே ஓடிக்கொண்டிருந்தது.
ஞாயிறு பூசை…..
யாழ்பாணத்து மீசாமில இருந்து சுவாமிமார் வந்திருக்கினம்…..
பாலர்சபை புள்ளயளுக்கு சின்னம்வேற சூட்டுறது….
பரபரப்பானவள் காலை கடமைகளையெல்லாம் கடகடவென முடித்துக்கொண்டுஅவளுக்கு பிடித்துப்போயிருந்த அந்த வெள்ளைநிற சட்டையைஉடுத்திக்கொண்டாள். தன்னிரு கைகளால் சட்டென்று பவுடரை முகத்தில்உரஞ்சி, கண்ணாடி பார்பதை அன்றைய தினம் புறக்கணித்து புறப்படதயாரானாள்.
நாலரை அஞ்சு மணிக்கெல்லாம் அடைந்துபோய் கிடந்த குருவிகளெல்லாம்கீச்சு சீச்சுவென கீச்சிடவும் அதேகொப்புக்களிலிருந்து சில சந்தேகத்துடன் கூவவும் தொடங்கிவிட்டன.
சிஸ்ரர்மாரட மடத்துக்குள்ள ஒரு பென்னாம்பெரிய புளியம் மரம் நிக்கும். அங்கு‘பறவைகளுக்கு அடைக்கலம்‘ என எழுதப்படாத சட்டமும் உண்டு. அவை குஞ்சுகுடும்பமென கீச்சிடும் சத்தங்கள் நான்கரை மணிக்கெல்லாம் தொடங்கிவிடும். சஞ்சுவாங் கோயிலை சூழவுள்ள குடிமனைகளுக்கு ரீங்காரத்தைவினியோகிப்பதில் முதலிடம் அந்த சரணாலாயத்திற்கே.
வில்லங்கமாய் கடற்காகங்களும் அங்குவந்து போவினம். அவை ஏரியாவையேஅசிங்கப்படுத்துவதாக அவ்வப்போது முறைப்பாடுகள் பங்குப்பணிமனைக்கும்ஏன் பாதரின் காதுகளில் படும்படியாகவும் நேரடியாகவே வருவதுண்டு. பின்னாட்களில் அவைதான் நமக்கேன் வில்லங்கமும் சாபமும்வேண்டாமெனச்சொல்லி வீசியடிக்கு அவை இடம்பெயர்து குடியமர்தன. அரசாங்கநிலத்தில அவயள் குடும்பத்தோடும் குலத்தோடும் இரவுப்பொழுதுகளில்தங்கிப்போவதை யாராலயண தடுக்கமுடியும்.
வீசியடியிலதான் ஏஜியோ கந்தோரும் தபால் கந்தோரும் இருந்தது. வெள்ளைக்காறனின் ஆசுப்பத்திரியும் ராணியம்மாவின் கோட்டையும்அவ்விடத்தில்தான் இருந்தன. மாதமொருமுறை ஏஜியோ கந்தோருக்குபோய்கையெழுத்திட்டு, முதியோர் கொடுப்பனவை தபால்கந்தோரில் வாங்குவதும்அவளின் பொறுப்பான வேலையாயிருந்தது. அந்தச் சம்பளத்தில் ஒரு பத்துரூபாய்க்கு சூப்பி இனிப்பு தடியொண்டு வாங்கி சூப்பிக்கொண்டும், அவளின்குதிக்காலைவிட நீண்டுபோயிருக்கும் செருப்புக்கள் காலோடு சேர்ந்தடிக்கும்தாளத்தோடும் அவளை அந்த வெல்லை வீதியில் காண்பது தனியான அழகை நம்மதீவிற்கு கொடுக்கும்.
அதுஒருபுறமிருக்க…
ஒருமாதிரியாய் இவளும் வீட்டின் படலை கயிற்றின் முடிச்சை அவிழ்த்துக்கொண்டு வெல்லை றோட்டேறினாள். வெல்லை வீதியெண்டதுவீசியடியில தொடங்கி யூதா கோயிலுக்கு நேராக போகிற றோட்டு. கிட்டத்தட்டநாற்பது ஆண்டுகளாய் மாறிமாறி வந்துவிட்ட அரசாங்கங்கள் அதிகாரிகள் வந்தும்கூட பாத்திராத றோட்டு அது. இப்பயெல்லாம் உயிரோடு கோயிலைசென்றடைய படுகின்றபாடோ பெரும்பாடு..
‘டேய் போடா உள்ள….
போடா… போடா தம்பி…..
இஞ்சே… அடிச்சுப்போடுவன்…’ எண்டு தனக்கேயுரித்தான கண்டிப்பில்பேசியவளுக்கு அந்த நாய்க்குட்டியும் அடங்கியபாடில்லை. இவனென்னடா… அவனும் வாலையாட்டிக்கொண்டு அவளின் காலுக்குள்ளயும் கையுக்குள்ளயும்பாஞ்சு விளையாடிக்கொண்டிருந்தான்.
விடடா..
கடிக்காதயடா….
அக்காவ விடடா… எண்டவள் படலைக்குள்ளேயே அவனுடன்சிரித்தும்கொண்டாள். படலைக்குள்ளேயே இழுபறி. அவன்தான் கடைசியில்வெண்டும்போட்டான். எண்டாலும் அவளது குழந்தையுள்ளமும் கள்ளமாய்அதைத்தான் எதிர்பார்த்தது.
அதே ஐந்துமணி!
அதேயந்த படலைதான்!
ஏஜியோவாயிருந்த நீக்கிலாஸ் ஐயா கத்தோருக்காய் விடிவிடிய முன்னர்போய்வருவதும், பவுத்திரமாய் குமுதினியை கடைசிவரை பாதுகாத்த தேவதாஸ்அண்ணன் பாவிச்சதும் அந்த படலைதான்.
அப்பயெல்லாம் நாய்க்குட்டியளுக்கும் சஞ்சுவாங்கோயிலுக்கு போகிறறோட்டுக்கள் அத்துப்படி.
ஐந்து மணிக்கெல்லாம் நாலஞ்சு விறகில அடுப்பு மூட்டி தேத்தண்ணிவைக்கேக்க அவயளும் கண் முழிப்பினம்.. குத்துமதிப்பில சீலைக்கு பிளீற்ருபுடிக்கேக்க அவையளும் கொஞ்சம் தெழிவடைவினம். புரண்டு படுக்கஎத்தணிக்கும் சிறுசுகள் முதுகில பளார் பளார் எண்டு அடிவேண்டி அழுகையும்முனகலும் கொட்டிலின் செத்தைய பிச்சுக்கொண்டு வெளிவரும்போது பூசைக்குவழிகாட்ட உசாராவது நம்மூர் நாய்களுக்கேயான பண்பும்கூட.
இப்பிடித்தான் பழக்கப்பட்டுப்போன அவள் தம்பியும் வாலையாட்டிக்கொண்டுசஞ்சுவாங்கோயிலக்காண குறுகிய ஓட்ட இடவெளியில முன்னாலஒடிக்கொண்டிருந்தான் அவளும் அவ்வப்போது உஞ்சு…டேய்..அடிப்பன்…எண்டுபெரிய ரீச்சரைப்போல அவனை அதட்டிக்கொண்டிருந்தாள்.
சமதூர இடைவெளியில் அவனது ஓட்டமும் இவளது நடையும்போட்டியிட்டுக்கொண்டு ஒருமாதிரியாய் பெரியவாசலை அடைந்தாச்சு. அந்தமணிக்கூட்டு கோபுரத்திலிருக்கும் சில்லுகளுக்கு தம்பி அன்ரனால் வழங்கப்பட்டவிசை அவற்றை வடக்குத்தெற்கெண்டு சுழண்டு ஒண்டு ரெண்டெண்டுதொடர்ந்தடித்து ஊரையெழுப்பியது. அமைதியாயிருந்த ஊரையெழுப்ப அதுவேமுதலாவது மணி.
இண்டைக்கு ஞாயிறு பூசைவேற ஒண்டு இரண்டு மூண்டாவது மணியும்அடிக்குமெண்டு தெரிஞ்சும் மணியோசைக்கு ஓலமிட்டு ஊழையிட்ட நாய்களில்ஒருவனான இவனை அவள் கண்டிக்க தவறவில்லை.
டேய்.. சும்மாயிரு..
நான் சொல்லுறனெல்லா..
உஸ்..உஸ்… சும்மாயிரு..
என்ற கண்டிப்புக்கு மதிப்பளித்து அவளது காலுக்குள்ளேயே அவனும்கூனிக்குறுகிக்கொண்டான்…
இவனுடனான இழுபறிக்கு மத்தியில் அவளது கைகள் பிதாச்சுதன்அடையாளமிட்டு முடித்தாயிற்று. அதே கைகளால் தள்ளிவிட்ட பெரிய கேற்ரும்இரண்டாக பிரிந்து வலப்பக்கமாய் சிற்ரர் மடத்தையும் இடப்பக்கமாய்கொண்வன்ற் ஸ்கூலையூம் நாடியோடிப்போனது.
சாடையான மைமல் கோயில் தெரிந்தும் தெரியாததுபோல் தென்பட்டாலும்பழக்கப்பட்டுப்போன அவளின் கால்கள் மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகால் போகும் ஒத்தையடி பாதயால் பங்குச் சுவாமியாரின் அறைவீட்டை குறிவைத்தேநடக்கத்தொடங்கின.
‘எங்கட பாதர் சோக்கான பாதர்…..
நல்ல பாதர்…. எனக்கு எப்பிடியாச்சும் இண்டைக்கு வேண்டித்தருவார்..’
ஏதோ வாயுக்குள் வந்தபடி தலையசைத்து முணுமுணுக்க ஆரம்பித்தவள் தன்கால்களின் வேகத்தையும் கொஞ்சம் கூட்டிக்கொண்டாள்.
கொஞ்ச நாளாய் இதைத்தான் அடிக்கடி முணுமுணுத்துக்கொண்டிருந்தாள். முந்தநாள் இரவும் நித்திரையில பிசத்தியதை றீற்ராக்கா கேட்டதுக்கு, ஒண்ணுமில்லயே..எண்டு ஒருசொல்லில் விடையளித்து, தேத்தண்ணிகோப்பையையும் அவ்விடத்திலேயே விட்டுவிட்டு, மெல்ல நகர்ந்துசென்ற மகா கெட்டிக்காரி..
முந்தநாள் நடந்து முடிந்த ஒத்திகை நிகழ்வின்போதும் கோயில்போட்டிக்கோவின் தூண்களுக்குள் ஒட்டியும் ஒட்டாததுமாய் மறைந்துபோய்நின்று உதைத்தான் வாயுக்குள் மளமளவெண்டு உச்சரித்தவள்..
சின்னப்பொடியள் நக்கலாய் சிரித்ததிற்கு, அவனுகளின் காதைமுறுக்கிக்கொண்டு அடிப்பன் அக்கா எண்டுசொல்லி தனக்குள்ளேசிரித்தும்கொண்டவள்.
சுவாமியாரிடம் ஏதாவது வாங்கித்தரச்சொல்லி கேட்டாளா?
அப்படியென்ன கேட்டிருப்பாள்?
குறையொண்டும் இல்லா மகாராணியே!
வீட்டில் அவளுமொரு சிறுமியெண்டுதான் பாத்துப்பாத்து எல்லாமேவாங்கிக்கொடுக்கிறது..
அறுபத்திரண்டு வயதுக்காறிக்கு அப்படியென்ன ஆசையாக்கும்?
அவளுக்குள் புதைந்துகிடக்கும்
உண்மையை அவள் தம்பி நாய்க்குட்டிக்கு மட்டும்தான் தெரியும் அவனுமென்னநம்மளோட கதைக்கவா போறான்..
நல்ல சோளக காத்து! கோயில் வளவின் தென்னம்மரங்களை சிலுப்பி உலுப்பிஊஸ் என்று சத்தமிட்டது. அந்த தென்னை மரச்சோலையிலிருந்துகொட்டிக்கிடந்த தேங்காய்களை ஒவ்வொன்றாய் புறக்கி சிற்ரர்மார்வளவுக்குள்ளும் சுவாமியாரின் அறவீட்டுக்குமாக பங்கிடுவதும் அவளின் அன்றையநாள் வேலைகளிலொன்று. இம்.. கிடக்கட்டும் பூசைக்கு போய்ட்டுவாறன்…தனக்குள்ளே புலம்பிக்கொண்டு..
இதில நிண்டு விளையாடோணும்…
தூரத்துக்கு போகாத…..அவளின் பாசமான கண்டிப்பு அந்த குட்டி நாய்மீதுவீழ்ந்தது.
தானும் தன்வேலையுமாய் சோலியொண்டுக்கும் போயிராதவள்..
பாதரால் பணிக்கப்படும் பூசைக்குரிய வேலைகளை மாத்திரம் தன்னுடைய வயதுக்கேயுரித்தான வேகத்தில் செய்துமுடிப்பதும்…
பாட்டுப்புத்தகத்தோடே கதிரையில் கண்ணயர்ந்துபோவதும்…
அதிகாரிகளோ, நல்லவன் பெரியவனுகளோ, சிறுசுகளோ, ஆமியோ நேவியோயார் வந்தாலும் எங்கட பாதரட்டயா வந்தனீங்க? இதில இருங்க , நான் பாதரகூட்டிக்கொண்டு வாறன் எண்டுசொல்லி பண்பாய் உபசரித்துஉட்காரவைப்பதென்று அவளை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். ஒட்டுமொத்தத்தில ராண்சரில மாறிமாறிப்போகும் பாதர்மாரைதெரிந்தவர்களுக்கும் பழக்கப்பட்ட பாத்திரமவள். அதனாலோ என்னமோ அவளைவிரும்பிக்கொள்ளுவோர் அதிகமாகவும் அதிகரித்துக்கொண்டுமிருந்தது.
குட்மோணிங் பாதர்…
நான் வந்திட்டனுங்க….
பூசைக்கு உதவுற தம்பியள் வந்திட்டாங்களா?
பொன்னுடுப்புத்தானுங்க எடுத்து வைச்சிருக்கிறன் பாதர்.
அடுக்கத்தொடுக்க கேள்விகளை கேட்டவாறே கோயில் படிக்கட்டுக்களைமெல்லமெல்ல ஏறியவளின் அன்றை எதிர்பார்ப்பின் கனாகனமும் மெல்லமெல்லஅதிகரிக்கத்தான் செய்தது.
எப்போதுமே தொண்டைவரை வந்துவிட்டுபோகும் அவளின் அந்த ஆசையைவெளிப்படுத்த காட்டிய தயக்கமே இன்று கடைசி நொடிப்பொழுதுவரை அவளைகொண்டுவந்து விட்டிருக்கிறது….
இதுவரை காலமும் அழகான கற்பனைகளால் செதுக்கி உயிரூட்டி அந்த கபடற்றஉள்ளத்தில் சேமித்து வைத்திருந்த எண்ணங்கள் நிறைவேற காத்துக்கிடந்தஅந்த ஒற்றை நாள், இன்று மணித்தியாலங்களாகி சட்டென்று குறுகிப்போனதைஅவளால் எப்படித்தான் ஏற்றுக்கொள்ள முடியும்?
பலமிழந்த கைகள் ஒருமாதிரியாக நடுங்கவும், மாறாட்டம் கொண்டவள்போலவார்த்தைகளும் அவ்வப்போது ஒன்றோடொன்று கொழுவிக்கொண்டன.
மீதமிருந்த இரண்டாம் மூன்றாம் ஆயத்த மணிகளும் ஓங்கியொலித்து அவளைஓரங்கட்டுவதுபோல் தனிமையை உணரச்செய்தது.
ஐயோ பாவம்!
அவளுக்கேன் இந்த துன்பம் வந்துதொலைத்ததோ?
எங்கட பாதர் நல்ல பாதர்! பாதருக்கு நல்ல சுகத்தை கொடும்! என்பதை தவிரதனக்காய் எதையுமே கேட்டிராதவள். அவளின் புலம்பலும் மன்றாட்டும் எப்போதும்அதுவாகவே அந்த கடைசி அறுபது ஆண்டுகளாய் இருந்தது. கைகளைகுவித்தபடியே முழங்காலில் இருந்துகொண்டு மீண்டும் அந்த பாதரையே கண்கள்தேடிக்கொண்டிருந்தது……
ஒன்று இரண்டு இருபது ஐம்பதென்று அதிகரித்த கூட்டம் கோயிலின்இடைவெளிகளை இல்லாதொழித்து நிரப்பிக்கொண்டிருந்தது.
வெள்ளை நிறத்தினாலான உடுப்புக்களை அணிந்திருந்த சிறுசுகளின்முகங்களில் சந்தோசம் அதிகாலையிலேயே பூத்துக்கொண்டிருந்தது. அன்றுதான்அவர்களின் திருப்பாலர்துவசபை திருவிழாவும்கூட.
மங்களகரமான வரவேற்பில் இருவேறு நிரல்களில் பீடத்தை நோக்கி வருவதும், ஒவ்வொருவரின் பெயர்களை பங்குத்தந்தை அறிவிக்குபோது,
திருத்தந்தையிடமிருந்துவந்த சின்னங்கள் அவர்களுக்கு சூடப்படும் என்பதுவும்நிகழ்சி நிரலாயுமிருத்தது.
என்னதான் ஒத்திகைகளை பாதரும் சிஸ்ரரும் அடிக்கடி பார்த்தாலும் பங்கிலுள்ளசிறார்களை ஒன்றிணைத்து நிகழ்வொன்றை நடத்துவதென்பது எவ்வளவுகடினமானது. பங்குத்தந்தை அங்குமாறி இங்கும், இங்குமாறி அங்குமாய்ஓடித்திருந்ததிலிருந்து ஓரளவேனும் உணர முடிந்தது.
ஒருமாதிரியாய் ஆரம்பித்துவிட்ட திருவிழா திருப்பலியில் சிறுவர்களின்பெயர்கள் வாசிக்கப்பட்டுக்கொண்டிருந்தது….
சின்னங்களும் சூட்டப்பட்டுக்கொண்டிருந்தது..
முதலாவதாய் ஜோசேப்பு சின்னாச்சி: பெயர் கூப்பிட்டவுடன் தலையை வணங்கி, பாதரிடம் வந்து பயபக்தியாய்
வாங்கிப்போனாள் சின்னாச்சி . அவளும் நல்ல கெட்டிக்காரி, ஐந்தாமாண்டுபரீட்சையில் அதிக புள்ளியெடுத்த யாக்கோப்புவின் பேத்தியவள்.
இரண்டாவதாய் அம்புறோசு ஆரோக்கியம்
மூன்றாவதாய் சின்னப்பு பவூஸ்தீனம்மா
நான்கு
ஐந்தென்று
இருபதாவதாய் அவளுக்கு பிடித்துப்போயிருந்த ஜேசுதாசன் சீவராசின்பெயரோடு பாதரின் பட்டியலும் சூட்டுதலும் நிறைவுக்கு வந்தது…
கோயிலில் இருந்து சட்டென்று வெளியேறியவளின்
கண்களிலிருந்து பொலுப்பொலுவென்று கண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது.
அப்போது அவளுக்கு ஓவென்று கத்தியழுவதை தவிர வழியேதும்தெரியவில்லை..அழுதுகொண்டு வீடுநோக்கி மரிஸ்ரெலா ஓடினாள்.
அக்காச்சி நில்லடி…
அக்காச்சி அழாதயண…
அவளின் வெள்ளைநிற சட்டையின் தலைப்பை வாயினால் கவ்விக்கொண்டும்காலுக்குள் ஓடிக்கொண்டுமிருந்தவன்
அழாதயண அக்காச்சி..
சின்னம் என்னடி சின்னம் உனக்கு வேணும்!
உனக்குத்தான் உன்ர கடவுள் மணிமுடி சூடுவாரேயடி!
உதைத்தவிர உனக்குச்சொல்ல வேறொன்றுமில்லை எண்டவன் மரிஸ்ரெலாவின்அந்த சிறுபிள்ளைத் தனத்தையும் அவளின் அழகிய உலகத்தையும்குலைத்துவிடாது அமைதியானா(னே)ன்….