காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான நேற்று(ஓகஸ்ட் 30) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கவனவீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் ஆகிய இடங்களில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று மன்னாரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முற்பகல் 10.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட மன்னார் ’சதொச’ முன்பாக ஆரம்பமானது.
மன்னார் நகரசபை விளையாட்டு மைதானம் வரை பேரணியாகச் சென்ற உறவுகள் தங்கள் கைகளில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் படங்களை, வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளிப்பதற்கான மனு ஒன்றை எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கங்களின் தலைவிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அருட்தந்தையர்களிடம் கையளித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து பலர் கலந்துகொண்டனர்.