“யாழ்ப்பாணம் – நாள் சத்திர சிகிச்சை நிலையம்” இன்று (06/02) திறந்து வைக்கப்பட்டுள்ளது
வடக்கு மாகாண மக்களின் சுகாதாரத் தேவைகளை மேம்படுத்தும் நோக்கில்,யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் உருவானதே யாழ்ப்பாணம் நாள் சத்திரசிகிச்சை நிலையமாகும்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடம்,போதனா வைத்தியசாலை மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து சர்வதேச அமைப்புகளான IMHO, JMFOA மற்றும் புலம்பெயர் உறவுகளின் பேராதரவுடன் இந்தத் திட்டம் முழுமை பெற்றுள்ளது
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆரம்ப விழாவில் சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம், போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் Dr. த. சத்தியமூர்த்தி, மருத்துவபீடப் பீடாதிபதி பேராசிரியர் இ.சுரேந்திரகுமாரன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பகல்நேர அறுவை சிகிச்சை (Day Surgery) என்பது ஒரு நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்துகொண்டு, 24மணித்தியாலங்களுக்குள் வீடு திரும்புவதைக் குறிக்கும்.
இதனைத் தமிழில் “நாள் சத்திரசிகிச்சை” அல்லது “அன்றே வீடு திரும்பும் அறுவை சிகிச்சை முறை” என்றும் அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.