முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட 2024 ஆம் ஆண்டிற்கான புதுவருடத்தினை வரவேற்றல் மற்றும் கடமை செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (ஜனவரி 1) மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக வளாகத்தில் காலை 8.30 மணியளவில் இடம்பெற்றது.
அரசாங்க சுற்றறிக்கையின் பிரகாரம், அனைத்து ஊழியர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற இந்த நிகழ்வில், மாவட்ட அரசாங்க அதிபரால் தேசியக் கொடி ஏற்றப்பட தேசிய கீதம் இசைக்கப்பட்டு, தேசத்திற்காக உயிர்த் தியாகம் செய்த அனைவரையும் நினைவு கூரும் முகமாக இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து அனைத்து ஊழியர்களும் அரச சேவை சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வு சிறப்புற இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நிகழ்நிலை மூலம் கௌரவ ஜனாதிபதி உரை இடம்பெற்றது.
மேலும் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்களின் வாழ்த்துரைகளும் அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலாளரின் சிறப்புரையும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு.சி.குணபாலன் , மாவட்ட பிரதம கணக்காளர், மாவட்ட உள்ளக கணக்காய்வாளர், மாவட்ட பதில் திட்டமிடல் பணிப்பாளர்,சமுர்த்தி பணிப்பாளர், பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிளைத்தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.