தேசிய அமைப்புக் கட்டுப்பாட்டகம் நடப்பாண்டின் இறுதி காலாண்டில் மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கவேண்டிய அவசியமில்லை என அறிவித்துள்ளது.
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளமை மற்றும் சாதகமான மழைவீழ்ச்சி முன்னறிவிப்பு காரணமாக முன்னர் விடுத்த கட்டண அதிகரிப்பு கோரிக்கையை தேசிய அமைப்புக் கட்டுப்பாட்டகம் உத்தியோகபூர்வமாக மீளப் பெற்றுள்ளது.
ஆரம்பத்தில் சுமார் 4.4 பில்லியன் ரூபாய் வருமானப் பற்றாக்குறை நிலவுவதாகக் சுட்டிக்காட்டி, இறுதி மூன்று மாதங்களுக்கு 2.88 சதவீத மின்சாரக் கட்டண உயர்வை வழங்குமாறு இந்நிறுவனம் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
எனினும், நிலவும் சூழ்நிலைகளை பரிசீலித்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, 1.46 சதவீத கட்டணத் திருத்தத்துக்கு மாத்திரமே அனுமதி வழங்க முடியும் எனத் தெரிவித்திருந்தது.
இது தொடர்பாக முன்மொழியப்பட்ட கட்டணத் திருத்தம் குறித்த பகிரங்க பங்குதாரர் கலந்தாலோசனை நேற்று புதன்கிழமை (04/11) நடைபெற்றுள்ளது.
இதன்போதே இந்நிறுவனம் தனது முந்தைய நிலைப்பாட்டை முற்றிலும் மாற்றிக்கொண்டுள்ளதுடன், மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை என்றும் அறிவித்துள்ளது.
தற்போது நிலவும் எல் நினோ வானிலை மாற்றங்களின் கீழ் நாட்டின் பிரதான நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதும், சராசரியை விட அதிக மழைவீழ்ச்சி கிடைக்கும் என்ற முன்னறிவிப்புகளுமே இந்த முடிவுக்கு பிரதான காரணமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரிப்பதன் மூலம் செலவு குறைந்த நீர்மின் உற்பத்தியை அதிகரிக்க முடியும். இதன் மூலம் அதிக செலவைக் கொண்ட அனல் மின் உற்பத்திக்கான தேவை பெருமளவு குறைக்கப்படும் என்பதால் கட்டணத்தை உயர்த்தாமலேயே நிலைமையைச் சமாளிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்று மேற்கொள்ளப்பட்ட இந்தக் கலந்தாலோசனை நிறைவடைந்துள்ள நிலையில், இறுதிக் காலாண்டுக்கான மின்சாரக் கட்டணம் குறித்த உத்தியோகபூர்வ இறுதித் தீர்மானத்தை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விரைவில் அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.