மட்டக்களப்பு பெண் கொலை மயக்க மருந்து விநியோகித்தவர் கொழும்பில் கைது !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மட்டக்களப்பில் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தி, தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு கிணற்றில் தள்ளி கொலை செய்ததாகக் கூறப்படும் கும்பலுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வத்தளையைச் சேர்ந்த 49 வயதுடைய மருந்து முகவர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29/03) இரவு கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கடந்த 20 ஆம் திகதி கொக்கட்டிச்சோலை – நெல்லிக்காட்டு வயல் பகுதியில் இடம்பெற்றது. அப்போது பாழடைந்த கிணற்றிலிருந்து வவுணதீவு – கொத்தியாவலை பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம் தாய் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டதுடன், ஏற்கனவே காணாமல் போனதாகக் கருதப்பட்ட மற்றொரு பெண் ஒருவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். மேலும், அந்த இளம் தாயின் 3 வயது மற்றும் 4 மாத குழந்தை வயல்வெளியில் உயிருடன் மீட்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் வர்ன ஜெயசுந்தரின் வழிகாட்டலில், மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரெத்தினவின் நேரடி கண்காணிப்பில் முன்னெடுக்கப்பட்டது.

அதன்பேரில், 24 மணித்தியாலங்களுக்குள் 05 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில், 26 வயது பெண், அவரது 34 வயது கணவர், 22 வயது தம்பி, கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை வாங்கிய இரு நகைக்கடை உரிமையாளர்கள் உள்ளடங்குகின்றனர்.

மேலும், இரண்டு முச்சக்கரவண்டிகள், ஒரு கார், கோடரி உட்பட கூரிய ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டன.

பின்னர், கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மயக்க மருந்துகள் மீட்கப்பட்டதுடன், மேலும் ஒரு முச்சகரைவண்டி சாரதியும் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், மயக்க மருந்துகளை வழங்கி கும்பலை இயக்கி வந்த பிரதான சூத்திரதாரி என சந்தேகிக்கப்படுபவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரை மட்டக்களப்பிற்கு கொண்டு வந்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Share this Article