இலங்கை புகைரதத் துறையில் பாரம்பரிய காகித டிக்கெட் முறையை மாற்றும் நோக்கில், ஸ்மார்ட் பயணச்சீட்டு முன்முயற்சி திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
CSRP திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த புதிய டிஜிட்டல் பயணச்சீட்டு முறை, நாடு முழுவதும் பயணிகள் சேவையை நவீனமயப்படுத்தும் முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
இந்த முன்முயற்சி திட்டம் முதற்கட்டமாக களனிவெளி ரயில் மார்க்கத்தில் செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, நாரஹென்பிட்டி, நுகேகொடை, மாகும்புர, ஹோமாகம, பதுக்கை ஆகிய ரயில் நிலையங்களில் ஏப்ரல் மாதத்தில் பல நாட்களுக்கு கட்டம் கட்டமாக இந்த சோதனை திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
புதிய முறைமையின் கீழ், நவீன பயணச்சீட்டு சரிபார்ப்பு கருவிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதுடன், பயணிகள் பயணச்சீட்டு வாங்குதல் மற்றும் சரிபார்ப்பு செயல்முறைகள் எளிமையாக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த டிஜிட்டல் பயணச்சீட்டு முறை பயணிகளின் நேரத்தை மிச்சப்படுத்துவதுடன், சேவையின் செயல்திறனை உயர்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முன்முயற்சி திட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்ற பின்னர், களனிவெளி ரயில் மார்க்கத்தில் அனைத்து நிலையங்களுக்கும் இந்த முறை விரிவுபடுத்தப்படவுள்ளதாகவும், அதன் பின்னர் நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில் மார்க்கங்களிலும் கட்டம் கட்டமாக அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், பயணிகள் நட்பு அம்சங்களும் புதிய முறையில் இணைக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த முழுமையான டிஜிட்டல் பயணச்சீட்டு திட்டம் இவ்வருடத்திற்குள் நிறைவு செய்யப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது