பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரியும், அதற்கு மாற்றீடாக அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டத்தை நிறுத்தக் கோரியும், பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (28/02) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தழுவிய ரீதியில் பாரிய மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

வடக்கில் யாழ்ப்பாணத்திலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் இந்தப் போராட்டங்கள் இடம்பெற்றன.
யாழ்ப்பாணம் நூலகத்திற்கு முன்பாக ஆரம்பமான இந்த போராட்டம் ஏ-9 வீதியூடாக பேரணியாக சென்று வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தை சென்றடைந்து அங்கு நிறைவுற்றது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தி “புதுசும் வேண்டாம் பழசும் வேண்டாம், வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளுக்கு நீதி வேண்டும், என கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் தவத்திரு வேலன் சுவாமிகள், மத குருக்கள், சமூக மட்ட சிவில் அமைப்புக்கள், அரசியல் பிரமுகர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள், இளைஞர்கள் மற்றும் யுவதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திற்கு அருகில் ஆரம்பமான இந்தக் கண்டனப் பேரணி, திருமலை வீதி ஊடாக மட்டக்களப்பு நகர் வரை ஊர்வலமாகச் சென்றது.
நகரில் உள்ள மணிக்கூண்டுக் கோபுரத்திற்கு அருகில் முதலில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து காந்தி பூங்காவில் பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இந்தப் போராட்டப் பேரணியில் மதத் தலைவர்கள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உபதலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், அரசியல் கட்சிகளின் அமைப்பாளர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் தலைவி, செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் இதில் திரளாகக் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
இதேவேளை, பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிராக இன்றைய தினம் யாழ்ப்பாணத்திலும் மாபெரும் கண்டன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.