தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை சிறுப்பிட்டியில் நடைபெற்றது.
மாணவர்களுக்குச் சுற்றுச்சூழல் பற்றிய அறிவைப் புகட்டி அதனூடாக சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களைச் சூழல் பாதுகாப்பில் பங்குபற்றுநர்களாக்கும் நோக்குடனும், மாணர்களிடையே பன்முக ஆளுமைத்திறனை விருத்தி செய்யும் நோக்குடனும் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் பசுமை அறிவொளி நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை கிராமங்களில் முன்னெடுத்து வருகின்றது.
இதன் தொடர்ச்சியாகவே இப்பசுமை அறிவொளி நிகழ்ச்சி சிறுப்பிட்டியில் அண்ணமா மகேஸ்வரர் ஆலய கலாசார மண்படத்தில் நடைபெற்றுள்ளது.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் சிறுப்பிட்டி மேற்கின் இணைப்பாளர் கு. மயூதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக ரொறன்ரோவின் மனிதநேயக்குரல் அமைப்பைச் சார்ந்த மரியாம்பிள்ளை மரியராசா கலந்துகொண்டிருந்தார்.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவர்களின் வகிபாகம் தொடர்பாக உரையாற்றினார்.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பொருளாளர் க. கேதீஸ்வரநாதனும் கலந்துகொண்டிருந்த இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மாணவர்களும் பெற்றோர்களும் பங்கேற்றிருந்தனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் மாணவர்கள் அனைவருக்கும் சூழல் விழிப்புணர்வு மேற்கோள்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டன.
இதற்கான அனுசரணையை ரொறன்ரோவின் மனிதநேயக்குரல் அமைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.