முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட நித்தகைக் குளம் பகுதிக்கு நேற்றுமுன்தினம்(ஓகஸ்ட் 28) முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சருமான திரு.காதர் மஸ்தான், தலைமையில் அரச அதிகாரிகள் களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டனர்.
உள்நாட்டில் நடைபெற்ற யுத்தம் காரணமாக இந்த பகுதியில் பல ஆண்டுகளாக பயிர் செய்யாது வயல் நிலங்கள் காடுகளாகவும் பற்றைகளாகவும் காணப்படுகின்றன. இவற்றில் சில பகுதிகளை வனவளத் திணைக்களத்தினர் வனப்பகுதிக்கு சொந்தமான இடமாக எல்லைப்படுத்தியுள்ளனர்.
இதனால் விவசாயத்தினை வாழ்வாதாரமாகக் கொண்ட விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் காணிகளை விடுவித்தல் தொடர்பிலும் நித்தகைக் குளம் உடைப்பெடுத்து இன்றுவரை சீர்செய்யப்படாமை தொடர்பிலும், நித்தகைக்குளத்தின் பிரதான வாய்க்காலினை எதிர்காலத்தில் புனரமைப்பு செய்தல் தொடர்பிலும் இந்த கள விஜயம் அமைந்திருந்தது.
இந்த கள விஜயத்தில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. க.கனகேஸ்வரன்(நிர்வாகம்), கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. உமாமகள்,மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர், மாவட்ட நில அளவையாளர், மாவட்ட வன அதிகாரி, காணிப்பகுதி உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.