நாளை 20ம் திகதி மீண்டும் ஒரு தாழமுக்கம் இலங்கைக்கு கிழக்காக உருவாகும்

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

18.02.2026 புதன்கிழமை பிற்பகல் 3.00 மணி

1. தற்போது இலங்கைக்கு தெற்காக நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு திசை நோக்கி குறிப்பாக மாலைதீவுகள்/ குமரிக் கடல் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.

2. எதிர்வரும் 20ம் திகதி மீண்டும் ஒரு தாழமுக்கம் இலங்கைக்கு கிழக்காக உருவாகும் வாய்ப்புள்ளது. இது இலங்கையின் கிழக்கு கரையோரமாக, வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து எதிர்வரும் 21 மற்றும் 22ம் திகதி வடக்கு மாகாணத்தை அண்மிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3. இதன் காரணமாக தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் சில மாகாணங்களுக்கு கிடைத்து வரும் மழை எதிர்வரும் 24.02.2026 வரை தொடரும் வாய்ப்புள்ளது.

4. கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் பரவலாக கிடைத்து வரும் கன மழை 23.02.2026 வரை தொடரும் வாய்ப்புள்ளது.

5. வடக்கு மாகாணத்திலும் நாளை (19.02.2026) மழை சற்று குறைவடைந்தாலும் மீளவும் 20.02.2026 சற்றுக் கனமழை கிடைக்க தொடங்கும். குறிப்பாக 21 மற்றும் 22 ம் திகதிகளில் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் பரவலாக சற்று கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

6. கிழக்கு மாகாணத்தோடு ஒப்பிடும் போது வடக்கு மாகாணத்திற்கு குறைவான மழையே கிடைக்கும் வாய்ப்புள்ளது.

7. பதுளை, மொனராகலை மாவட்டங்களுக்கு தற்போது கிடைத்து வரும் மழை எதிர்வரும் 21 மற்றும் 22ம் திகதிகளில் இம்மாவட்டங்களின் பல பகுதிகளுக்கும் கனமழையாக கிடைக்கும் வாய்ப்புள்ளது.

8. எதிர்வரும் 21 மற்றும் 22ம் திகதிகளில் மத்திய,சப்ரகமுவா, தென் மாகாணங்களுக்கு பரவலாக கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

9. எதிர்வரும் 21 மற்றும் 22 ம் திகதிகளில் நாடு முழுவதும் பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

10. அன்புக்குரிய கிழக்கு மாகாண மக்களுக்கு இன்று முதல் எதிர்வரும் 23.02.2026 வரையான திரட்டிய மழை வீழ்ச்சி மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே குளங்களின் வான் பாயும் பகுதிகளிலும், ஆற்றங்கரையோரங்களிலும், தாழ்நிலப் பகுதிகளிலும் உள்ள மக்கள் சாத்தியமான வெள்ள அனர்த்தம் தொடர்பில் அவதானமாக இருப்பது மிக அவசியம்.

11. உருவாகக்கூடிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக எதிர்வரும் 20.02.2026 முதல் 24.02.2026 வரை வடக்கு, கிழக்கு, தென் கிழக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது.

12. எதிர்வரும் 21 மற்றும் 22ம் திகதிகளில் மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதனால் இந்தப் பகுதிகளில் இந்த நாட்களில் நிலச்சரிவு நிகழ்வுகள் தொடர்பில் மக்கள் மிக  அவதானமாக இருப்பது அவசியம்.

13. இது இன்றைய நிலையின் கணிப்பு. இதில் சில மாற்றங்கள் நிகழக்கூடும் என்பதையும் கருத்தில் கொள்ளவும்.

14. இந்த தீவிர வானிலை நிகழ்வுகள் தொடர்பான முன்னறிவிப்புக்கள் தொடர்ந்தும் இற்றைப்படுத்தப்படும்.

Share this Article