13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பவுள்ள கடிதம் நாளை(ஜூலை 14) இந்தியத் தூதுவரிடம் கையளிக்கப்படவுள்ளது. இந்தக் கடிதத்தில் சில கட்சிகளின் தலைவர்களே கையொப்பமிட்டுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்குப் பயணம் செய்யவுள்ள நிலையில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கடிதங்களை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்ப தமிழ் தரப்புகள் நடவடிக்கை எடுத்துள்ளன.
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும், தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் ஒன்றை அனுப்புகின்றன.
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின்படி 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும், வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கான மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் கூட்டணி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனும், புளொட் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனும், ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனும், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் சார்பில் வேந்தனும் இந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.
அதேவேளை, தங்கள் கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்றை இலங்கைத் தமிழரசுக் கட்சி தனியாக அனுப்பவுள்ளது.
மறுபுறத்தில் தங்கள் கோரிக்கை அடங்கிய கடிதம் ஒன்றை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்கனவே அனுப்பியுள்ளது.