நயினாதீவு இலங்கை வங்கிக் கிளை உடைக்கப்பட்டு திருட்டு நடந்த நிலையில் அது தொடர்பில் ஆராய்வதற்காக வந்த யாழ்ப்பாணம் தடையவியல் பொலிஸாரின் விசாரணைகள் நடைபெற்று முடிந்துள்ளன.
வங்கியிலிருந்து சில்லறைப் பணங்களின் பக்கெற்றுக்கள் களவாடப்பட்டிருப்பதாகவும் வங்கியிலுள்ள இரும்பு பெட்டகங்கள் உடைப்பதற்கு முயற்ச்சி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான மேலதிக விசாரணையை நயினாதீவுப் பொலிஸாரும் யாழ்ப்பாண தடையவியல் பொலிஸாரும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த வங்கிக் கிளை பாதுகாப்புக்காக பாதுகாப்பு உத்தியோகத்தர் எவரும் நியமிக்கப்படவில்லை என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை காரணமாக வங்கி பூட்டப்பட்டிருந்த நிலையில், இன்று (மே 29) வங்கி திறக்கப்பட்டபோது அங்கு திருட்டு நடந்துள்ளமை தெரியவந்துள்ளது.
வங்கியின் பாதுகாப்புக் கமரா சேமிப்பகமும் உடைத்துத் திருடப்பட்டுள்ளது. வங்கியில் திருடப்பட்ட பணம், ஆவணங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.
இது தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்றும், விசாரணைகள் தொடர்கின்றன என்றும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.