திக்கம் வடிசாலையை மீள இயக்குவதற்குச் சாத்தியமான அனைத்து வழிகளிலும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன், அதனை ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்தி நிலையமாக மீளச் செயற்படுத்துவதற்கான திட்டங்களைத் தயாரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், திக்கம் வடிசாலையை மையப்படுத்திப் பனை அபிவிருத்திச் சபைக்கும் தனியார் நிறுவனத்துக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் சட்டவலு தொடர்பில் ஆராய்ந்து, சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோரின் இணைத் தலைமையில், திக்கம் வடிசாலையை மீள இயக்குவது தொடர்பான கலந்துரையாடல் இன்று (13.10) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.றஜீவன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், யாழ். மாவட்டச் செயலாளர், வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர், பனை அபிவிருத்திச் சபையின் தலைவர், முகாமையாளர் மற்றும் சபையின் உறுப்பினர்கள், கூட்டுறவுச் சங்கங்களின் கொத்தணிகள் மற்றும் சமாசங்களின் பிரதிநிதிகள், அமைச்சர் மற்றும் ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.