தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த மூவர் நேற்றுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது, அவர்களைப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது.
கடந்த 2ஆம் திகதி வடமராட்சி கிழக்கு, மருதங்கேணியில் சந்திப்பு ஒன்றுக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களுக்கும், பொலிஸ் புலனாய்வாளர்கள் என்று அடையாளப்படுத்திய இருவருக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டன.
அதன்பின்னர் அருகில் இருந்த பாடசாலையில் பரீட்சைக் கடமையில் இருந்த இரு பொலிஸாரும் சம்பவ இடத்துக்கு வந்து அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர் என்று கூறப்படுகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ஏனைய இரு உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டு பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் மூவரைக் கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைக்கு அழைத்திருந்தனர். அவர்கள் விசாரணைக்காகச் சென்ற சமயம் பொலிஸார் அவர்களை இன்று (ஜூன் 15) கைது செய்தனர்.