தமிழர்களின் போராட்டத்தை உள்நாட்டு விவகாரமாகவன்றி, சர்வதேச விவகாரமாக அங்கீகரிக்குமாறு ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக்கொண்டு இயங்கும் ஈழத்தமிழர் பேரவை ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய சர்வதேச கட்டமைப்புக்களிடம் வலியுறுத்தியுள்ளது.
‘கறுப்பு ஜுலை’ கலவரங்கள் இடம்பெற்று இவ்வருடத்துடன் 40 ஆண்டுகள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில், அதனை முன்னிறுத்தி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே ஈழத்தமிழர் பேரவை மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
1983 ஆண்டு ஜுலை மாதம் இடம்பெற்ற ‘கறுப்பு ஜுலை’ கலவரங்கள் இலங்கையின் வரலாற்றில் மிகமுக்கிய இடம்பிடித்திருக்கும் அதேவேளை, உள்நாட்டு யுத்தத்தில் திருப்புமுனையாகவும் அமைந்தது. இக்கலவரங்கள் யுத்தத்தை மேலும் தீவிரப்படுத்தியதுடன் சிங்கள மற்றும் தமிழ்ச்சமூகங்களுக்கு இடையில் நிலவிய பிளவுகளை ஆழப்படுத்தியது.
கறுப்பு ஜுலை கலவரங்களின்போது தெற்கில் வாழ்ந்த தமிழ்மக்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் காடையர்கள் வசமிருந்தமை, தீயிட்டுக்கொளுத்துவதற்கு வெள்ளைநிற பெற்றோல் கொள்கலன்கள் பயன்படுத்தப்பட்டமை, காடையர்கள்வசம் தாக்குவதற்கு ஏதுவான இரும்புக்கம்பிகள் காணப்பட்டமை ஆகியவற்றின் மூலம் இக்கலவரங்கள் பல வாரகாலமாகத் திட்டமிடப்பட்டுள்ளன என்ற விடயம் வெளிப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழர் தாயகத்திலும் ஏனைய பகுதிகளிலும் 1956 – 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற இனப்படுகொலைகளின் விளைவாக அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தின் 3, 4, 6, 7, 8, 9, 12, 13, 14, 17, 23, 24, 25, 26 உள்ளிட்ட பல சரத்துக்கள் மீறப்பட்டுள்ளன. இருப்பினும் இலங்கையைக் குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கு அவசியமான ஆதாரங்களை சர்வதேச சமூகம் இன்னமும் கண்டறியவில்லை.
கறுப்பு ஜுலை கலவரங்களுக்கு முன்னரும், பின்னரும் சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ்மக்களுக்கு எதிரானதும், அவர்களை அச்சுறுத்தும் வகையிலானதுமான கருத்துக்களை வெளியிட்டுவந்திருக்கின்றனர். பௌத்த தேரர்கள், இலங்கை இராணுவத்தினர், பொலிஸார், சில சிங்கள அமைச்சர்கள் நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கைப் புறக்கணித்துச்செயற்படுகின்றனர்.
அவர்கள் நீதிபதிகளை அவமதிக்கும் அதேவேளை, நீதிமன்றத்தினால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களைப் புறக்கணித்து, மக்கள் மத்தியில் சர்ச்சையைத் தோற்றுவிக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிடுகின்றனர்.
மேலும் அண்மையகாலங்களில் தமிழர் தாயகப்பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ள மனிதப்புதைகுழிகள் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் பல்வேறு சந்தேகங்களையும் அச்சத்தையும் தோற்றுவித்திருக்கின்றன. இத்தகைய மனித உரிமை உரிமை சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச சட்டத்துக்கு அமைவாக விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டியது அவசியமாகும்.
இவ்வாறானதொரு பின்னணியில் தமிழர்களின் போராட்டத்தை உள்நாட்டு விவகாரமாகவன்றி, சர்வதேச விவகாரமாக அங்கீகரிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய சர்வதேச கட்டமைப்புக்களிடம் வலியுறுத்துகின்றோம். அதேபோன்று இலங்கையில் கண்டறியப்பட்ட அனைத்து மனிதப்புதைகுழிகளையும் சர்வதேச நியமங்களுக்கு அமைவாகப் பாதுகாப்பதற்கும், அவைதொடர்பில் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் அவசியமான அழுத்தங்களை அரசாங்கத்துக்கு வழங்குமாறு சர்வதேச அமைப்புக்களிடம் கோருகின்றோம்.
மேலும் துடிப்பான ஜனநாயக சமூகத்தின் இயக்கத்துக்கு அவசியமான ஊடக சுதந்திரத்துக்கு மதிப்பளிப்பதுடன் அதனைப் பாதுகாக்குமாறு அரசாங்கத்தைத் தொடர்ந்து வலியுறுத்துமாறும் கோரிக்கைவிடுக்கின்றோம் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.