க.பொ.த உயர்தரம் மற்றும் தரம் 1 முதல் 11 வரை கல்வி கற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் புலமைப் பரிசில் உதவித் தொகை நேற்று (ஜூலை 12) முதல் மாவட்ட அளவில் வழங்கப்படுகிறது.
அண்மையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் கொழும்பு மாவட்ட மாணவர்களுக்கு புலமைப் பரிசில்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, மற்ற 24 மாவட்டங்களுக்கும் புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்று முதல் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டது.
இதற்கமைய, இன்று ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில், நாளை (ஜூலை 13) யாழ்ப்பாணம், மாத்தளை, பதுளை மாவட்டங்களில் புலமைப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் நிகழ்வு நாளை (ஜூலை 13) நடைபெறும். முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் ஜூலை 18 மற்றும் புத்தளம் மாவட்டத்தில் ஜூலை 22 அன்று புலமைப் பரிசில்கள் வழங்கப்படும்.
மாவட்ட செயலாளர்கள் தலைமையில், வலயக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அதிபர்களின் ஒருங்கிணைப்புடன் இந்த புலமைப் பரிசில்கள் வழங்கப்படுகின்றன.
புலமைப் பரிசில் திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர்ப் பட்டியல் ஏற்கனவே வலய மட்டத்தில் ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்வ Facebook பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
க.பொ.த உயர் தர மாணவர்களுக்கு மாதாந்தம் ரூ. 6000 வீதம் 24 மாதங்களுக்கு வழங்கப்படவுள்ளது. ஒரு கல்வி வலயத்திலிருந்து 60 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு, மொத்தம் 6000 மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கப்படும்.
தரம் 1 முதல் 11 வரை உள்ள மாணவர்களுக்கு மாதாந்தம் ரூ. 3000 வீதம் 12 மாதங்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.